எதையுமே காட்டிக்கொள்ளவில்லை.. நான் நினைத்துக்கூட பார்க்கல.. விஜய்யை புகழ்ந்த நடிகர்
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்கிவருகிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் விஜய் குறித்து காளி வெங்கட் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.
GOAT: அந்தவகையில் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்லது.
அடுத்த படம்: GOAT படத்தை முடித்துவிட்டு தனது 69ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை விஜய் யாருக்கு கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவருகிறது. இச்சூழலில் அந்த வாய்ப்பை கார்த்தி சுப்புராஜ் தட்டி சென்றார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஹெச்.வினோத்தின் பெயர்தான் பலமாக அடிபடுகிறது. ஜூன் மாதம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காளி வெங்கட் பேட்டி: இந்நிலையில் நடிகர் காளி வெங்கட் விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஜய்யுடன் நடிக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் எனக்கு ஆர்வமாகவே இருந்தது. அவர் மிகப்பெரிய நடிகர் செட்டில் எப்படி இருப்பார் என்று நான் ஒரு கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தார் விஜய். அவ்வளவு எளிமையாக இருந்தார். தான் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதையே அவர் காட்டிக்கொள்ளவில்லை. அவர் அப்படி இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்றார். விஜய்யுடன் காளி வெங்கட் தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











