Legacy of Love: கடவுள் இல்லாம இருந்திருக்கேன்.. மனுஷங்க இல்லாம இருந்ததில்லை.. கமல் உருக்கம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதி தயாரித்த இனிமேல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடியிருந்த இந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து அவரே நடித்திருந்தார். மனித உணர்வுகளை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து தற்போது பரஸ்பரம் உரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வீடியோவில் இருவரும் பல விஷயங்களை பேசியுள்ளனர். இனிமேல் பாடலுக்கு உணர்வுபூர்வமாக கமல்ஹாசன் எழுதியிருந்த பாடல் வரிகள் குறித்தும், தந்தை மகள் அன்பு குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளனர். இந்த உரையாடல் நிகழ்ச்சியை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இனிமேல் பாடலை அவர்கள் இருவரும் பாடுவதுடன் இந்த வீடியோ துவங்கியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் தன்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவரது அடுத்தடுத்த மூவ்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாக பார்க்கப்படும் கமல்ஹாசன் தற்போதும் புதுப்புது விஷயங்களை தேடி கண்டுபிடித்து கற்பதில் தீவிரம் காட்டி வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையை காட்டி வருகிறார். அவரது மகள் ஸ்ருதிஹாசனும் இதேபோன்ற திறமைகளுடன் சினிமாவில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
இனிமேல் பாடல்: அழகான நடிகையாகவும், இசையமைப்பாளர், பாடகி, பாடலாசிரியர் என சினிமாவில் பன்முகம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் இனிமேல் என்ற இசைப்பாடலை வெளியிட்டிருந்தார். இதில் அவருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும்வகையில் அமைந்திருந்த இந்தப் பாடல் பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியதுடன், பாடலை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கவும் செய்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து பேசியுள்ள உரையாடல் வீடியோவை தற்போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
கமல் -ஸ்ருதி உரையாடல் வீடியோ: இந்த வீடியோவில் பல விஷயங்களை பேசியுள்ள கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்த பல கேள்விகளை இதன்மூலம் தான் கேட்டுக் கொண்டதாக ஸ்ருதி, வீடியோவின் இடையில் பேசியதை பார்க்க முடிந்தது. இருவரும் இணைந்து உருவாக்கிய இனிமேல் இந்த தொல்லை இல்லை என்ற பாடலை பாடியபடி இந்த உரையாடலை அவர்கள் துவங்கியுள்ளனர். இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்த நிலையிலும், அதிகமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கமலிடம் கேள்வி கேட்ட ஸ்ருதி: இனிமேல் பாடலுக்கான வரிகளை, இரு மனங்களின் உணர்வுகளை எப்படி அவர் வார்த்தைகளாக கொண்டு வந்தார் என்று ஸ்ருதி கேள்வி எழுப்ப, இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தான் கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்துள்ளதாகவும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் 5 மணிநேரங்கள்கூட தன்னால் இருக்க முடியாது என்றும் அதனால் மனித மனங்களை அதன் உணர்வுகளை தான் சிறப்பாக கடத்த முடியும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், தன்னால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியும் என்று பதிலளித்ததை பார்க்க முடிந்தது.
ஸ்ருதியை மிஸ் செய்யும் கமல்ஹாசன்: தன்னை அவர் எப்போதாவது மிஸ் செய்ததுண்டா என்று ஸ்ருதி அடுத்ததாக கேள்வி எழுப்ப, வளர்ந்த பெண்களை பார்க்கும் சூழல்களை காட்டிலும் எந்த வீட்டிலாவது குழந்தைகளை பார்க்கும்போது தான் ஸ்ருதிஹாசனை மிஸ் செய்வேன் என்று கூறினார். தன்னுடைய கைகளில் சாயவைத்து அவர் குழந்தையாக இருந்தபோது தூங்க வைத்த நினைவுகளும் வந்துபோகும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய ஆசைகள் குறித்தும் கமல்ஹாசன் பேசினார். தனக்கு பிடித்த விஷயங்களை செய்வது தன்னை மிகவும் குஷியாக்குவதாகவும் அந்த வித்தையை கற்று வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











