அன்னைய்யா எஸ்பிபி.. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு கமல் இரங்கல்!
சென்னை: எஸ்பிபியின் மறைவுக்கு அன்னைய்யா எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். நேற்றே அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நேற்றே அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனையின் அந்த அறிக்கை பலரின் இதயங்களிலும் இடியாக இறங்கியது. மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றார்.

நலம் என சொல்ல முடியாது
எஸ்பிபியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து வெளியே வந்த நடிகர் கமல்ஹாசன், காரில் இருந்தப்படியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது எஸ்பிபி நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது. அவரின் குடும்பத்தினர், அவர்கள் நம்பும் இறைவனை வேண்டி வருகிறார்கள் என்றார்.

ஏழு தலைமுறைக்கும்
இந்நிலையில் இன்று எஸ்பிபியின் உயிர் பிரிந்த நிலையில் அவருக்கு ரிச்சாக இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், அன்னைய்யா எஸ்பிபி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என டிவிட்டியுள்ளார்.

உடன் பிறவா அண்ணன்
மேலும் எஸ்பிபியுடன் தான் சேர்ந்திருந்த தருணங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் கமல். அதில் கமலும் எஸ்பிபியும் இளம் வயது முதல் இப்போது வரை இருந்த, சிறப்பான தருணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இடம்பெற்றன. வீடியோவுக்கு பின்னணியில் தன்னுடைய உடன் பிறவா அண்ணன் எஸ்பிபி என உருக்கமாக பேசியிருக்கிறார் கமல்.

சிரம் தாழ்ந்த வணக்கம்
அவர் பேசியிருப்பதாவது, வெகு சில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன் பிறவா அண்ணன் திரு எஸ்பிபி அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தப்படியே அவரை வழியனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனாக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அவர் புகழ் வாழும்
அவர் நனைந்த மழையில் கொஞ்சத்தை நானும் பகிர அனுமதித்த அண்ணனுக்கு நன்றி.. அவரின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு கிடைத்த பேறு.. பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர்.. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.. இவ்வாறு அந்த வீடியோவின் பின்னணியில் பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











