தேசத்தை திரும்பி பார்க்கவைத்த தமிழ் திரையுலகம்..சூர்யா உள்ளிட்டோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 68வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் படங்களுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி சூர்யா உள்ளிட்ட விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68வது தேசிய விருதுகள்
68வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகள், தமிழ் திரையுலகை பெருமை கொள்ளச் செய்துள்ளது. 10 விருதுகளை இந்த ஆண்டு தமிழ்ப்படங்கள் தட்டித் தூக்கியுள்ளன. குறிப்பாக சூர்யாவின் படம் 5 விருதுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தன்னுடைய மெருகேறிய நடிப்பின் மூலம் படத்திற்கு படம் பெருமை சேர்த்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் சூரரைப் போற்று. கேப்டன் கோபிநாத்தின் பயோ பிக்காக வெளியான இந்தப் படம் சிறப்பான திரைக்கதையுடன், சூர்யாவின் நடிப்பும் சேர்ந்து மிளிர்ந்தது.

சுதா கொங்கரா சிறப்பான இயக்கம்
ஓடிடியில் வெளியான போதிலும், இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். பயோ பிக்காக இருந்தாலும், மிகுந்த அக்கறையுடன், கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே கதைக்கருவாக கொண்டு இந்தப் படத்தை செதுக்கியிருந்தார் சுதா கொங்கரா.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுதா கொங்கரா
இறுதிச்சுற்று மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக கோலிவுட்டில் நிலைநிறுத்தியிருந்த சுதா கொங்கராவிற்கு சூரரைப் போற்று படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில், இந்தப் படம் தற்போது தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூரரைப் போற்று 5 விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது.

5 தேசிய விருதுகள்
சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் என 5 பிரிவுகளில் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். நேற்றைய தினம் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

சூர்யா உள்ளிட்டோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
இந்நிலையில் தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு தொடர்ந்து திரையுலகினர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே நடிகர் கமல்ஹாசனும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒட்டு மொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை தமிழ் திரையுலகம் திரும்பிப் பார்க்க செய்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெருமையளிப்பதாக பாராட்டு
குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளதை அவர் தனியாக குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இது பெருமையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா படங்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். விருதாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











