எதையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர்... டிபி கஜேந்திரன் மறைவுக்கு கமல் இரங்கல்
சென்னை: தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த டிபி கஜேந்திரன் நேற்று காலை காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து டிபி கஜேந்திரனின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் டிபி கஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

டிபி கஜேந்திரன் மறைவு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த டிபி கஜேந்திரன் நேற்று காலை தனது 68வது வயதில் காலமானார். இயக்குநராக மட்டும் இல்லாமல் காமெடியனாகவும் குணசித்திர பாத்திரங்களிலும் சுமார் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இயக்குநர் விசுவிடம் உதவியாளராக வேலை பார்த்த டிபி கஜேந்திரன், அவரைப் போலவே குடும்ப சென்டிமெண்ட் படங்களை இயக்கி ரசிகர்களை என்டர்டெயின் செய்து வந்தார். இந்நிலையில், டிபி கஜேந்திரன் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் அடுத்தடுத்து சோகம்
1988ம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் திரைப்படம் மூலம் இயக்குநரான டிபி கஜேந்திரன். தொடர்ந்து பாண்டி நாட்டு தங்கம், நல்ல காலம் பொறாந்தாச்சு, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மனாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குநர் கே.விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், பரியேறும் பெருமாள் தங்கராஜ், பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்து திரை பிரபலங்கள் உயிரிழந்து வருவது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல் இரங்கல் ட்வீட்
நேற்று உயிரிழந்த டிபி கஜேந்திரன் உடலுக்கு கவுண்டமணி, மனோபாலா, செந்தில் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் டிபி கஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் திரு டிபி கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன" என குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத பம்மல் கே சம்பந்தம்
கமல் - டிபி கஜேந்திரன் கூட்டணியில் பம்மல் கே சம்பந்தம் படத்தில் இடம்பெற்ற காமெடி சீன் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவன் வேடம் போட்ட கமல் வாயில் பபுள்கம் போடுவதும், அதற்கு டிபி கஜேந்திரனின் ரியாக்ஷனும் இன்றும் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ரகம் எனலாம். இதுபோல பல காமெடி காட்சிகளில் நடித்துள்ள டிபி கஜேந்திரன், தனது படங்களையும் மிக நகைச்சுவையாக எடுப்பதில் கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











