கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்!
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை நடையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவியரசர் கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் என பலவற்றை எழுதியவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்ட கவிஞர் கண்ணதாசன், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார். அவரது 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து கூறியிள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ். இவ்வாறு தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கமலின் இந்த பதிவை 6000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











