Actor Kannan:ரஜினியிடம் ரூட் கேட்ட காதல் ஓவியம் ஹீரோ.. பாராட்டிய கமல்ஹாசன்!
சென்னை: பாரதிராஜாவின் காதல் ஓவியம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கண்ணன்.
இந்தப் படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் அதிகமாக கவர்ந்த நிலையில், தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஒரே படத்தோடு அவர் கோலிவுட்டைவிட்டு காணாமல் போனார். அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

நடிகர் ரஜினியிடம் ரூட் கேட்ட காதல் ஓவியம் கண்ணன்: பாரதிராஜாவின் படங்களில் முக்கியமான படமாக காதல் ஓவியம் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக சென்று சேரவில்லை என்றபோதிலும் அவரது இயக்கத்தில் பெஸ்டாகவே தற்போதும் பார்க்கப்படுகிறது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் தற்போதும் ரசிகர்களின் எவர்கிரின் பேவரிட்டாகவே காணப்படுகிறது. புதுமுகம் கண்ணன் இந்தப் படத்தின்மூலம் அறிமுகமானார்.
டீக்கடையில் ஏற்பட்ட சந்திப்பே இந்தப் படத்தின் வாய்ப்பை தனக்கு பெற்றுத் தந்ததாக கண்ணன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முதல் படத்திலேயே முன்னணி நடிகை ராதாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற கண்ணனுக்கு இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தபோதிலும் படம் வசூல்ரீதியாக சொதப்பிய நிலையில், பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக அலைமோதிய கண்ணன், ஒருகட்டத்தில் வெறுத்துப்போய் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

41 ஆண்டுகள் கழித்து தற்போது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார் கண்ணன். அவரது யூடியூப் பேட்டி, தற்போது வைரலாகி வருகிறது. 60 வயதுகளை கடந்த நிலையில், மிகவும் ஸ்மார்ட்டாக காணப்படுகிறார் கண்ணன். ஆனால் பழைய லுக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறார். அவரது இந்தப் பேட்டியில் கமல், ரஜினி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மீண்டும் நடிக்க தான் தயார் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினி குறித்து பேசியுள்ள கண்ணன், ஒருமுறை ஸ்டூடியோ ஒன்றில் வாய்ப்பிற்காக தான் சென்றபோது, வெளியில் வரும் வழி தெரியாமல் திண்டாடியதாகவும், தூரத்தில் சிகரெட் பிடித்தபடி இருந்த நபரிடம் வெளியில் செல்லும் வழி குறித்து தான் விசாரித்ததாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அது சூப்பர்ஸ்டார் ரஜினி என்று தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவரது காதல் ஓவியம் படத்தை ரஜினி பாராட்டி பேசியதையும் நினைவு கூர்ந்துள்ளார் கண்ணன்.

இதேபோல, பாரதிராஜாவை பார்ப்பதற்காக தான் மற்றொரு ஸ்டூடியோவிற்கு சென்று அவருக்காக காத்திருந்த நிலையில், அங்கு வந்த கமல்ஹாசன், கிளீன் ஷேவ், வெட்டிய தலைமுடியுடன் தன்னைப் பார்த்துவிட்டு அடையாளம் தெரியாமல் சென்றதாகவும், பிறகு உண்மையை தெரிந்துக் கொண்ட, கமல்ஹாசன், தன்னை கூப்பிட்டு தன்னுடைய காதல் ஓவியம் படம் குறித்து பாராட்டு தெரிவித்து சிறப்பான நடிப்பு என்று கூறியதையும் கண்ணன் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
தன்னுடைய அறிமுக படமான காதல் ஓவியம் படத்திலேயே சிறந்த டைரக்டர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் பெற்றது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறும் கண்ணன், ஆனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காதது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்றும் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கண் தெரியாத ஹீரோ கேரக்டர் தற்போதும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. என்றபோதிலும் இத்தகைய சிறந்த நடிகர், தமிழ் சினிமாவில் தொடராதது துரதிர்ஷ்மாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











