தேங்கா போளி கொண்டா.. திரட்டுப்பால கொண்டா.. தலைவாழை இலை விருந்து.. மெய்யழகன் வீடியோ பாடல்!
சென்னை: 96 படம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இயக்குநர் பிரேம்குமார். அவரது அடுத்தப்படமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது மெய்யழகன். முதல் படத்தில் காதலை கொண்டாட வைத்த இயக்குநர் இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை கொண்டாட வைத்துள்ளார்.
நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான மெய்யழகன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. படத்திற்கு அதிகப்படியான பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டன.

மெய்யழகன் படம்: நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம்குமார் டைரக்ட் செய்திருந்தார். முன்னதாக விஜய் சேதுபதி -திரிஷா காம்போவில் இவர் இயக்கியிருந்த 96 படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. காதலை மிகவும் கவனமுடன் சிறப்பான காட்சிகள் மற்றும் திரைக்கதையுடன் கொடுத்திருந்தார் பிரேம்குமார். பள்ளிக் காதலை இந்தப்படம் பார்வையாளர்களுக்கு கடத்தியது. படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தன்னுடைய பள்ளிக்காதலில் மீண்டும் பயணமாயினர்.
நீளம் குறைக்கப்பட்ட மெய்யழகன் படம்: இதனிடையே மெய்யழகன் படத்தில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதைக்களத்தை சிறப்பாக்கியிருந்தார் பிரேம்குமார். 96 படத்தை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதைக்களமும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்த நிலையில், படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் 18 நிமிட காட்சிகளை பிரேம்குமார் குறைப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். படத்திற்கு கோவிந்த வசந்த் இசையமைத்திருந்த நிலையில், பாடல்களும் அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை கவர்ந்திருந்தன
டெல்டா கல்யாணம் வீடியோ பாடல்: இந்நிலையில் படத்தின் டெல்டா கல்யாணம் பாடலின் வீடியோ தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் திருமணத்தையொட்டி இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் வாழையிலையில் பந்தி போடும் கிராமத்து வழக்கத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார். இதுபோன்ற பந்தி பரிமாறும்முறை நகரத்து திருமணங்களிலும் உள்ள நிலையிலும் இங்கு பெரும்பாலும் பஃபே முறை அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த வீடியோ பாடலை, கல்யாணத்தை, சொந்த பந்தங்களை உபசரிக்கும் பாங்கை, பார்க்கும் ரசிகர்களுக்கு தாங்கள் சிறுவயதில் கொண்டாடிய இத்தகைய கொண்டாட்டங்கள் நிழலாக வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.
நாயகியாக ஸ்ரீதிவ்யா: இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீதிவ்யா நாயகியாக களமிறங்கியுள்ளார். ஸ்ரீதிவ்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை ஐதராபாத் வரை சென்று தேடி பிடித்து இந்தப் படத்தில் இணைத்ததாக இயக்குநர் பிரேம்குமார் முன்னதாக தனது பேட்டியில் கூறியிருந்தார். முதலில் கார்த்தியின் தங்கையாக இணையவிருந்த அவர் பின்பு கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி தன்னுடைய நடிப்பில் மிகப்பெரிய ஸ்கோர் செய்திருந்த நிலையில், அவருக்கு அடுத்தப்படியாக கார்த்தி, ஸ்ரீதிவ்யாவின் கேரக்டர்களும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திருந்தன.


Click it and Unblock the Notifications











