தயவுசெய்து அனைவரும் வாக்களியுங்கள் - கார்த்தி
சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்கும் புதிய கட்சி உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும் மக்கள் குடைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 19.3% வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்று சொன்னாலும் வரிசையில் நின்று வாக்களிக்க திரை நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் நீண்ட வரிசையில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார் ''மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துங்கள்.
இல்லையெனில் படிப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள். ஆறு, ஏரிகளை தூர் வாரி மரம் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என ஆட்சியமைக்கும் புதிய கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.
சிவகுமாரின் மகனும், நடிகருமான கார்த்தி ''மழை பெய்கிறது என்று வீட்டில் இருக்காமல் தயவுசெய்து வந்து ஓட்டுப் போடுங்கள். விவசாயம் தமிழகத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
வருகின்ற ஆட்சி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அமேரிக்காவில் இருப்பதால் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா அவரின் மனைவி ஜோதிகா ஆகியோர் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











