“கமல் சார் நடிக்கவிருந்த கேரக்டரில் நான் நடிச்சது பயமாக இருக்கு”: கார்த்தி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகர் கார்த்தி அச்சம் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் கார்த்தி
மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், வந்தியத்தேவன் என்ற மிக முக்கியமான கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.

வந்தியத்தேவனாக கலக்கவரும் கார்த்தி
பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற பாத்திரங்களில் ஒன்று வந்தியத்தேவன். இந்த நாவலை படமாக எடுக்க முயன்ற பலரும், வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ரொம்பவே மெனக்கெடல் செய்வார்களாம். ஜெயலலிதா, சிவாஜி இருவருமே வந்தியத்தேவன் கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வந்தியத்தேவனாக நடிக்கவிருந்த கமல்
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் தற்போது படமாக இயக்கியிருந்தாலும், இதற்கு முன்னர் எம்ஜிஆர், ரஜினி, கமல் என பலரும் இதனை எடுக்க முயற்சி செய்திருந்தனர். முக்கியமாக பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் உரிமையை, நடிகர் கமல் வாங்கி வைத்திருந்தார். அப்போது வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்க கமல் ரொம்பவே ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது

அச்சம் தெரிவித்த நடிகர் கார்த்தி
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவன் கேரக்டரிலும் நடித்துள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, "1989ல் கமல் சார் இந்தப் படத்தை எடுக்க நினைத்தார். அப்போது அவர் வந்தியத் தேவன் பாத்திரத்தில்தான் நடிக்க முடிவு செய்திருந்தார். தற்போது அந்த கேரக்டரில் நான் நடித்துள்ளேன் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்தப் படம் 70 வருட தமிழ் சினிமாவின் கனவு. இந்த தலைமுறையில் பிறந்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். கமல் நடிக்கவிருந்த பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளது பெருமையான தருணம் என, அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











