கார்த்தியின் கைவசம் இத்தனை படங்களா… அப்போ அந்த ப்ராஜக்ட் எப்போ வரும்?
சென்னை: கோலிவுட்டில் இந்தாண்டு மாஸ் காட்டிய நடிகர்களில் கார்த்தி தான் முதலிடத்தில் உள்ளார்.
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கார்த்தி நடிப்பில் வெளியான 3 திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன.
தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஹாட்ரிக் ஹிட் அடித்த கார்த்தி
கார்த்தியின் கேரியரில் இந்தாண்டு ரொம்பவே முக்கியமானதாக அமைந்தது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கார்த்தி நடிப்பில் வெளியான 3 படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இதனால், கார்த்தியின் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றன. தற்போது தனது 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார் கார்த்தி. ராஜூ முருகன் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அடுத்தாண்டு பொன்னியின் செல்வன் 2
ஜப்பான் படப்பிடிப்பு ஒரேகட்டமாக நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், படத்தை அடுத்தாண்டு சம்மரில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதால், எதேனும் பேட்ச் ஒர்க் இருந்தால் மட்டும் கார்த்தி அந்தப் பக்கம் சென்று வருவாராம். இதனிடையே ஜப்பானை தொடர்ந்து கார்த்தியின் 26வது படத்தின் இயக்குநர் பற்றியும் அப்டேட் கிடைத்துள்ளது.

கார்த்தி 26… கார்த்தி 27…
அதன்படி, ஜப்பான் ஷூட்டிங் முடிந்ததும் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம். கார்த்தியின் 26வது படமாக இது உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சர்தார் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். அதேபோல், கார்த்தியின் 27வது படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளதாம். இந்த இரண்டு படங்களிலும் கார்த்தி ஒரே நேரத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சர்தார் 2, கைதி 2?
இந்நிலையில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சர்தார் 2, கைதி 2 படங்களின் ஷூட்டிங், அடுத்தாண்டு இறுதியில் தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சர்தார் 2, கைதி 2 இரண்டு படங்களுக்கும் இன்னும் கதை முடிவாகாததால், படப்பிடிப்பும் தாமதமாக தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சர்தார் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், கைதி 2 படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் தயாரிக்க உள்ளதாம். இந்தாண்டு 3 படங்கள் வெளியானதை போலவே, அடுத்தாண்டும், அதற்கு அடுத்தாண்டிலும் கார்த்தியின் நடிப்பில் தலா 3 படங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், கார்த்தியின் கால்ஷீட் 2024ம் ஆண்டு வரை பிஸிதான் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











