வாடிய முகம்! தனது படத்துக்காக உயிரை விட்ட ஸ்டண்ட் மாஸ்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது ஏழுமலையின் குடும்பத்தாருக்கும் படக்குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, உயிரிழந்த ஏழுமலையின் வீட்டிற்கு நேரில் சென்று, ஏழுமலையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் சர்தார். தண்ணீர் மாஃபியாவை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு கார்த்தி உளவாளியாக நடித்து கண்ணீர் சிந்தவைத்திருந்தார். இந்த படம் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் ரூபாய் நூறு கோடி வசூல் செய்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சர்தார் படத்தின் 2ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி கடந்த 12ஆம் தேதி படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. மேலும் 15ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

சண்டைக் காட்சி : இந்நிலையில் சர்தார் 2படத்தின் படப்பிடிப்பு 15ஆம் தேதியில் தொடங்கியதில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டு இருந்த இந்த படப்பிடிப்பின்போது, 20 அடி உயரத்தில் இருந்து எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையில், சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் ஏழுமலையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மரணம்: ஆனால் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 16ஆம் தேதி அதாவது நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்தது எப்படி? : பிரசாத் ஸ்டூடியோவின் மற்றொரு தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுகொண்டு இருந்தபோது, அடுத்த காட்சிக்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சினிமாவில் பல ஆண்டுகளாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்.

படக்குழு விளக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து, " ஜூலை 16ஆம் தேதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அப்போது சுமார் இரவு 11.30 மணியளவில் ஏழுமலை என்ற ஸ்டண்ட் கலைஞர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி, படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டு இருந்து சிறிய மேசை ஒன்றில் விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த வரை நாங்கள் உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
துக்கத்தில்: ஆனால் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மருத்துவர்களால் அவரைக் காப்பற்ற முடியவில்லை. சர்தார் 2 படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த ஆழ்ந்த வருத்ததை உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், இந்த துக்கத்தில் சர்தார் 2 படக்குழுவும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேரில் அஞ்சலி: இந்நிலையில், நடிகர் கார்த்தி ஏழுமலையின் வீட்டிற்குச் சென்று ஏழுமலையின் உடலுக்கு தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார். இதுமட்டும் இல்லாமல் ஏழுமலையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனது படத்தில் பணியாற்ற வந்த ஏழுமலை படப்பிடிப்புத் தளத்தில் உயிரிழந்தது என்பது கார்த்தியை மிகவும் பாதித்துள்ளது. இதனால் பெரும் சோகத்துடனும் வாடிய முகத்துடனும் ஏழுமலையின் குடும்பத்தினரைச் சந்தித்தார் கார்த்தி. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











