பெண்கள் கட்டாயம் பார்க்கணும்.. எந்த போலீஸ் படத்தின் சாயலும் இருக்காது.. - 'தீரன்' பற்றி கார்த்தி
சென்னை : 'சிறுத்தை' படத்திற்குப் பிறகு கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.
'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் ஹீரோ கார்த்தி படத்தைப் பற்றிப் பேசினார்.

சிறுத்தை படப்பின் போதே
'தீரன் அதிகாரம் ஒன்று' வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதை நான் 'சிறுத்தை' படத்துக்காக படப்பிடிப்பில் இருந்த போதே தெரியும்.

என்னைச் சுற்றியே வந்தது
அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மைச் சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

ஆக்ஷன் படம்
'தீரன் அதிகாரம் ஒன்று' முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும்.

பாடல்கள்
இந்தப் படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும்போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல், காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல், காரை வேகமாக ஓட்டிச் செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல், மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

எந்த சாயலும் இல்லை
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்தப் படத்தில் தந்துள்ளேன். தீரனில் நான் இயக்குநரின் நடிகராகத்தான் இருந்துள்ளேன். இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.' என கார்த்தி பேசினார்.


Click it and Unblock the Notifications











