தரிசனம் கிடைக்குமா.. குந்தவைக்கு ட்விட்டர் மூலம் வந்தியத்தேவன் தூது.. கார்த்தி -த்ரிஷா அலப்பறை!
சென்னை : பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பம் 30ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர்.
முதல் பாகத்திற்கு செய்ததை போலவே இரண்டாவது பாகத்திற்கும் படக்குழுவினர் ப்ரமோஷனல் டூர் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீசானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக வெளியான நிலையில், படத்தில் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ல் வெளியாகும் அடுத்த பாகம்
முதல் பாகம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது. லைகாவுடன் இணைந்து இந்தப் படத்தை மணிரத்னமும் தயாரித்திருந்த நிலையில், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது இதையடுத்து இரண்டாவது பாகத்தை விரைவிலேயே வெளியிட தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் படம் ரிலீசாகவுள்ளது.

ப்ரமோஷன் பணிகளை துவக்கிய படக்குழு
இதையொட்டி படத்தின் ப்ரமோஷன் பணிகளை தற்போதே படக்குழு முடுக்கிவிட்டுள்ளது. முன்னதாக த்ரிஷா, கார்த்தி ஆகியோர் எவ்வாறு குந்தவை மற்றும் வந்தியத்தேவனாக மாற்றம் பெற்றார்கள் என்பதை விவரிக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இதையடுத்து பர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிடவுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குந்தவைக்கு வந்தியத்தேவனின் தூது
இந்நிலையில் இன்றைய தினம் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, த்ரிஷாவை குறிப்பிடும் வகையில் ஹாய் இளையபிராட்டி என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அங்கிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில், என்ன பதிலே இல்லை என்றும் கேட்டார். இதையடுத்து அங்கிருந்து ரிப்ளை வந்தது. என்ன வாணர்குல இளவரசே என்று பதிலுக்கு த்ரிஷா ட்வீட் செய்திருந்தார். உடனடியாக தங்களது தரிசனம் கிடைக்குமா என்று பதில் கேள்வி கேட்டிருந்தார் கார்த்தி.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
பதிலுக்கு த்ரிஷா ம்ம. யோசித்து செய்தி அனுப்புகிறேன் என்று பதிலளிக்க, கடல் கடந்து சென்று உங்களது ஆணையை நிறைவேற்றி விட்டு வருபவனுக்கு வெறும் மோரை மட்டும் கொடுத்து அனுப்பிவிட மாட்டீர்களே என்று கார்த்தி பதில் கேள்வி கேட்டுள்ளார். இவ்வாறு கார்த்தி மற்றும் த்ரிஷாவின் உரையாடல் அமைந்திருந்தது. இவர்களது காதல் பாடலாக அகநக வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு த்ரிஷாவிடம் கார்த்தி சரணடைவதாக போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விரைவில் பிரமோஷன்
தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. அதேபோல ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இவர்கள் இருவரும் தங்களது படங்களின் தற்போதைய ஷெட்யூலை முடித்துக் கொண்டு விரைவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷனில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











