ஏப்ரல் 2.. நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஸ்பெஷல் டேவா.. அப்படி என்ன விசேஷம் தெரியுமா?
சென்னை: நடிகர் கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மூன்று படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் 2ம் தேதி தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆன நாள் என நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நாளில் தான் நடிகர் கார்த்தி நடித்த பையா, கொம்பன் மற்றும் சுல்தான் உள்ளிட்ட 3 படங்கள் வெளியாகி உள்ளன.

கரெக்ட்டான ரூட்டில்
நடிகர் கார்த்தி கமர்ஷியல் மற்றும் கன்டென்ட் நிறைந்த படங்கள் என அண்ணன் சூர்யாவை போலவே கரெக்ட்டான ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கார்த்தியின் படங்கள் வெளியாகி மினிமம் கியாரண்டி வெற்றியை பெற்று வருகிறது. வரிசையாக கார்த்திக்கு இருக்கும் லைன் அப் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

12 ஆண்டுகளை கடந்த பையா
பருத்திவீரன் படத்தின் மூலம் முரட்டுத் தனமான கிராமத்து காட்டானாக நடித்து மிரட்டிய கார்த்தியை இயக்குநர் லிங்குசாமி அப்படியே சாக்லெட் பாயாக பையா படத்தில் மாற்றியிருந்தார். ரோடு மூவியான பையா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன. பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் இன்னமும் ரசிகர்கள் ஹாட் ஃபேவரைட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொம்பன் ரிலீசாகி 8 ஆண்டுகள்
2010ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பையா வெளியானது போல, கொம்பன் திரைப்படம் 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆவதை கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன் படத்தில் ராஜ்கிரண் மாமனாராக நடித்திருப்பார். லட்சுமி மேனன் கார்த்திக்கு ஜோடி.

விருமனுக்கு வெயிட்டிங்
மீண்டும் கார்த்தி - முத்தையா கூட்டணியில் விருமன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்திக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பல மாதங்கள் ஆகும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போன வருஷம் சுல்தான்
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வெளியான சுல்தான் ரிலீசாகி ஒரு ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். தமிழில் ராஷ்மிகா நடித்த முதல் படம் சுல்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்கு பிடித்த நாள்
இந்நிலையில், "பையா எனக்கு புத்தம்புது பிம்பத்தை முழுமையாக வெளிப்படுத்த வித்திட்டது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!" என கார்த்தி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வந்தியத்தேவனை காண
விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் என மூன்று வெயிட்டான படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாகி அவரது மார்க்கெட்டை உயர்த்த போகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியை வந்தியத்தேவனாக காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான அவரது வித்தியாசமான பொன்னியின் செல்வன் லுக் நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











