மிக முக்கிய தருணத்தில் தமிழக முதல்வராகிறீர்கள்.. வாழ்த்தோடு அதையும் சொன்ன நடிகர் கார்த்தி!
சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

முதல் முறையாக முதல்வர்
இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். ஏற்கனவே திமுக ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்துள்ள ஸ்டாலின் தற்போது முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து
கொரோனா அச்சுறுத்தல், நிதி நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியில் ஸ்டாலின் வரும் சனிக்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு தேசிய, மாநில அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமான தருணத்தில்..
அந்த வகையில் நடிகர் கார்த்தியும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, 'மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!' என குறிப்பிட்டுள்ளார்.

விடாமுயற்சிக்கு வெற்றி
இதேபோல் இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ள டிவிட்டில், திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! முதல்முறையாக முதல்வர் பொறுப்பேற்கப் போகும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
இது உங்களின் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











