For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கருணாஸை மிரட்டியவர் அடையாளம் கண்டுபிடிப்பு

  By Sudha
  |

  Navneeth Kaur and Karunaas
  சென்னை: இலங்கைக்குப் போகக் கூடாது என்று நடிகர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்து பேசியவரின் தொலைபேசி எண் காஞ்சனா என்ற பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  இலங்கை கதிர்காமர் முருகன் கோவில்தான் நடிகர் கருணாஸ் குடும்பத்தினரின் குல தெய்வக் கோவிலாம். அங்கு வைத்து தனது மகனுக்கு மொட்டை போட முடிவெடுத்தார் கருணாஸ். அதேசமயம், இலங்கை அரசு நடத்தும் எப்.எம். வானொலி நிகழ்ச்சியிலும் பங்கேற்க தீர்மானித்தார்.

  இதையடுத்து தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கருணாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ் வந்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தார். நாம் தமிழர் அமைப்பினர்தான் இதை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

  இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் கருணாஸுக்கு வந்த தொலைபேசி எண்ணுக்கு உரியவர் காஞ்சனா என்பதும், முகவரி சாலிகிராமம் எனவும் தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து சம்பந்தப்பட்ட காஞ்சனாவைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

  'இனத் துரோகி கருணாஸ்'-நாம் தமிழர் இயக்கம் தாக்கு:

  ரூ. 10 லட்சம் பணத்துக்காக சிங்களனின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கத் துடிக்கும் நடிகர் கருணாஸ் ஒரு இனத் துரோகி. அவரை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். நாம் தமிழர் மீது அவர் வீசி வரும் அவதூறுகளை சட்டப்படி சந்திப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.ஆகவே

  இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

  கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.

  இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார்.

  இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது. இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ், அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.

  கறுப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத் தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர். இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு, தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும், தான் நடிகன் எனக்கு ஜாதி,மதம்,இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும், பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும், தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார்.

  ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

  இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முண்ணனி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

  தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா, அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக் குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத் துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

  இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார்.

  தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப் பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X