தனிச்சிருங்க விழிச்சிருங்க புள்ளிங்கோ.. நடிகர் கருணாஸ் இசையில் அசத்தலாக வருகிறது கொரோனா, கானா!
சென்னை: கொரோனா விழிப்புணர்வுக்காக நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ, வித்தியாசமான கானா பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
Recommended Video
பிரபல நடிகர் கருணாஸ். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.
சினிமாவில் காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இப்போது குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ்
இப்போது கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ், இத்தாலியிலும் அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாடுகளிலும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

நீட்டிக்கப்படும்?
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள்
சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்காக பல நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸூம் கொரோனா விழிப்புணர்வுக்கும் முதல் நிவாரண நிதிக்கு பணம் வழங்க வலியுறுத்தியும் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

தனிச்சிருங்க விழிச்சிருங்க
இதுபற்றி கருணாஸிடம் கேட்டபோது, உண்மைதான் என்றார். 'தனிச்சிருங்க விழிச்சிருங்க விசிலடிச்சான் புள்ளிங்கோ/ ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ/ கொள்ளை நோயி கொரோனா, குரல்வளையை கவ்வுது/ கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது... என்று தொடங்கும் பாடல் அது. நானே இசை அமைத்து, கொஞ்சம் ஃபோக் ஸ்டைல் கானாவாக பாடுகிறேன்.

நிவாரண நிதி
இந்தப் பாடலில் கொரோனா விழிப்புணர்வுடன் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கவும் வலியுத்துகிறோம் என்றார். இந்தப் பாடல் இன்று மாலையோ, நாளை காலையோ வெளியாகும் என்று தெரிகிறது. கொரோனா பிரச்னை முடிந்ததும் அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் கருணாஸ்.

உலகமயமாக்கல்
அந்த படம் பற்றி கூறும்போது, கேரளாவில் நடக்கும் கதை. உலகமயமாக்கல் காரணமாக ஏற்படும் பாதிப்பைச் சொல்லும் படம். தமிழில் முக்கியமான படமாக இருக்கும். அம்பாசமுத்திரம் அம்பானி, ஜீவா நடித்த திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார். இந்த பிரச்னைகள் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











