வசூலில் மாஸ் காட்டும் கவினின் டாடா.. நல்ல விமர்சனங்களும் கிடைச்சிருக்கு!
சென்னை : நடிகர் கவின், அபர்ணா தாஸ் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த வாரத்தில் திரையரங்குகளில் டாடா படம் ரிலீசானது.
அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள டாடா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.
படத்தில் கவின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அவருடைய கேரியரில் இந்தப் படம் சிறப்பான துவக்கத்தை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் பிரபலம் கவின்
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கவின். இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. இந்த நிகழ்ச்சி கவினுக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து சத்ரியன், நட்புன்னா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லிஃப்ட் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துவரும் கவின் நடிப்பில் கடந்த வாரத்தில் டாடா படம் ரிலீசாகியுள்ளது.

சிறப்பாக அமைந்த டாடா படம்
டீன் ஏஜ் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்குமே டாடா படம் சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான திரைக்கதை
அறிமுக இயக்குநராக இருந்தாலும் கணேஷ் கே பாபு இந்தப் படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் நாளிலேயே இவர் லைகா நிறுவனத்தின் அடுத்தப் படத்தில் கமிட்டாகியுள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாசிற்கும் டாடா படம் அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

3 நாட்கள்.. ரூ 6 கோடி வசூல்
இந்தப் படம் ரிலீசாகி கடந்த 3 நாட்களில் சர்வதேச அளவில் 6 கோடி ரூபாய்களுக்கும் மேலாக வசூலித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் சூழலில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான முயற்சிக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் உதாரணமாக உள்ளது.

ரசிகர்கள் பாராட்டு
படத்தில் கவின் தன்னுடைய மெச்சூர்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சரியான கதைக்களங்களை அவர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் சிவகார்த்திகேயன் ரேஞ்சிற்கு அவர் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











