Kavin - கவின் காட்டில் மழைதான்.. அடுத்தது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா?.. இதோ லேட்டஸ்ட் தகவல்
சென்னை: Kavin (கவின்) நடிகர் கவின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
கமல் - கவின்: படம் கதை ரீதியாக எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு கவினின் நடிப்பும் பலரால் கொண்டாடப்பட்டது. மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் கவினை நேரில் அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமின்றி அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
திருமணம்: இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அடுத்தடுத்த படங்கள்: கவின் அடுத்ததாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் எலன் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார் என்றும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. இந்த சூழலில் கவினின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில்?: அதன்படி அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் மாமன்னன் படத்துக்கு பிறகு வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படமும், தனுஷை வைத்து ஒரு படமும் இயக்குகிறார். இந்த இரண்டு படங்கள் முடிந்த பிறகு கவினை அவர் இயக்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











