என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
சென்னை: காமெடி நடிகர்களை விவேக் அரவணைத்தது போல வேறு எந்தவொரு காமெடி நடிகரும் அரவணைத்து இருக்க மாட்டார்கள் என்பது ஒவ்வொரு உதவி காமெடி நடிகர்கள் பேசும் போதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தான் நடிகராக மாற காரணமே விவேக் சார் தான் என புதிய பேட்டி ஒன்றில் விவேக் சாருடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விவேக்கின் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாரடைப்பு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி அவர் காலமானார். பல முன்னணி நடிகர்களுடன் விவேக் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

ஆனால், எப்போதும் தனது டீமில் உள்ள துணை காமெடி நடிகர்களை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லையாம். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதல் நபராக சென்று அதை தீர்த்து வைக்க முடிந்த உதவிகளை விவேக் சார் செய்வார் என கொட்டாச்சி பேசியுள்ளார்.
வில்லங்கமான வணக்கம்: சினிமாவில் நடிப்பதற்காக சென்றிருந்தேன். யாரை பார்த்தாலும் வித்தியாசமாக "வணக்கம் சார்" என சவுண்டாக வணக்கம் வைப்பேன். தொடர்ந்து இப்படி செய்து கொண்டிருந்ததே சிலருக்கு எரிச்சல் ஆகி விட்டது. அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு வேட்டு வைக்க பார்த்தது. அப்போது எனக்கு பக்க பலமாக இருந்து பேசி என்னை நடிகனாக மாற்றியதே விவேக் சார் தான் என கொட்டாச்சி பேசியுள்ளார்.
கிண்டலடித்த மணிவண்ணன்: சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற இடத்தில் சில பிரபலங்களுக்கு வணக்கம் வைத்தேன். அவர்கள் கோபத்தை தணிக்க கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் வணக்கம் வைக்க அவங்க ரொம்பவே டென்ஷனாகி யாருடா நீ என கேட்டு விட்டனர். நான் நடிகன் சார் என சொன்னதை கேட்ட மணிவண்ணன். ஆமாம், இவர் தான் நடிகர். நாங்க எல்லாம் பெயிண்ட் அடிக்க வந்திருக்கோம் என சொல்லி விட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக என்னை வீட்டுக்கே அனுப்பி விட அங்கிருந்தவர்கள் முடிவு செய்து விட்டனர் என்றார்.
காப்பாற்றிய விவேக்: எதுக்கு சார் அவனை வீட்டுக்கு அனுப்பனும். அவன் நடிக்கத்தானே வந்திருக்கான். அவன் நல்லா நடிக்கலைன்னா அனுப்பலாம். ஒரு வாய்ப்புக் கூட கொடுக்காமல் அனுப்புவது சரியில்லை என பேச அவர்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை. அதன் பின்னர் என்னிடம் வந்து விவேக் சார் சொன்னார், உன்னை வீட்டுக்கே அனுப்ப முடிவு செஞ்சிட்டாங்க, இந்த படத்துல நல்லா நடிச்சாத்தான் சினிமாவுல இருக்க முடியும்னு சொன்னார். அவர் அன்னைக்கு பண்ண உதவியை என்னைக்குமே மறக்க மாட்டேன். முதல் சீனே விவேக் சாருடன் நடிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து தனது படங்களில் என்னை நடிக்க வைத்தார் எனக் கூறியுள்ளார்.
அந்த படமே ரிலீஸ் ஆகல: ஒரு கட்டத்தில் விவேக் சாரை விட்டுட்டு மற்ற படங்களில் நடிக்க நான் போயிட்டேன். பவித்ரன் சார் இயக்கிய படம் ’புகழ்’ன்னு டைட்டில் வச்சாங்க. அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகல. அதே போல பாண்டவர் பூமி படத்துக்காக சேரன் சார் ஆபிஸுக்கு அட்வான்ஸ் கொடுக்க கூப்பிட்டார். விவேக் சாரிடம் சொன்னதும், அந்த படத்தை முடிச்சுட்டு வாடான்னு சொன்னார். அங்கேயும் போய் பிரச்சனையில் சிக்கினேன். ஆனால், கடைசி வரை எனக்காக விவேக் சார் பல உதவிகளை செய்தார் என கொட்டாச்சி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











