கொக்கைன் வழக்கில் அடுத்த கட்டம்.. கைதான நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
சென்னை: ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையுமே தற்போது பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள விஷயமாக கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விநியோகம் செய்தது என அடுத்தடுத்து நடிகர்கள் கைது செய்யப்படுவது தான். அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் பொருப்பாளர் பிரதீப்பை காவல்துறை விசாரித்ததில் தான் கொக்கைன் புழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் காவல்துறை நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணாவை வரும் ஜூலை 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்றவை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள். ஆனாலும் அது மக்கள் மத்தியில் மிகவும் ரகசியமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. காவல்துறையும் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த விஷயம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சினிமாவில் மட்டுமே பார்த்தும், கொக்கைன் என்ற வார்த்தையைக் கேட்டும் வந்த பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் கொக்கைன் பயன்படுத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட நடிகரான ஸ்ரீகாந்த், அவரது ரத்த மாதிரிகளில் மூலம் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானது. இது மட்டுமல்லாமல், காவல்துறையின் விசாரணையில் தான் கொக்கைன் பயன்படுத்தியது எப்படி என்பது குறித்தும் விளக்கமாக வாக்குமூலம் கொடுத்தார். ஏற்கனவே பிரதீப்பின் நடத்தப்பட்ட விசாரணை, அதன் பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்புள்ளது என காவல்துறைக்கு தெரியவந்தது. அதையடுத்து அவரைக் கைது செய்ய காவல்துறை சார்பில் சிறப்பு படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார்.
வாட்ஸ்அப்: அவரைக் கைது செய்த பின்னர், தனக்கு வயிற்றில் சில உபாதைகள் இருப்பதாகவும், இதய துடிப்பு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அதனால் தன்னால் இது போன்ற போதைப் பொருளை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கிருஷ்ணாவை அடுத்து காவல்துறை தரப்பில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் கெவின். கெவின் உடன் கிருஷ்ணா நடத்திய வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தை அடிப்படையாக கொண்டு இவர்கள் இருவரிடமும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
14 நாட்கள்: கெவினிடம் கொக்கைன் வாங்கிய அனைவரும், அவர்கள் திரைப்பிரபலங்களாக இருந்தாலும் சரி சமூகத்தில் வேறு எந்த படிநிலைகளில் இருந்தாலும் அவர்களும் காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவினிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், இருவரையும் வரும் ஜூலை 10ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல நடிகர்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











