நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. லெஜண்ட் சரவணன் உறுதி!
சென்னை: லெஜண்ட் சரவணன் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் இணைந்து தன்னுடைய இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஷெட்யூல்கள் நிறைவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக தூத்துக்குடியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன் காலமும் நேரமும் சரியாக அமைந்தால் தான் அரசியலில் என்ட்ரி கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் லெஜண்ட் சரவணன்: பிரபல பிசினஸ்மேனான லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான தி லெஜண்ட். படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து தன்னுடைய இரண்டாவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை சிறப்பாக மாற்றியுள்ளார் லெஜண்ட் சரவணன்.
ஆக்ஷன் திரில்லர் கதை: லேசான தாடியுடன் சரவணனின் கெட்டப் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்ததாக தூத்துக்குடியில் துவங்கவுள்ளது. இதற்கான பயணத்தின்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன் பல விஷயங்களை பேசியுள்ளார். தன்னுடைய அடுத்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் படத்தை போலவே இரண்டாவது படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் தேடி வருவார்: இதனிடையே, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்றும் சரியான கூட்டணி அமைப்பவர்களே வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை தேடி இத்தனை காலங்களாக ரசிகர்கள் சென்றுக் கொண்டிருந்த நிலையில், இனிமேல் அவர் ரசிகர்களை தேடி வருவார் என்றும் லெஜண்ட் சரவணன் கூறியுளளார்.
அரசியலில் என்ட்ரி: தனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் என்று கூறியுள்ள சரவணன், சரியான காலமும் நேரமும் அமைந்தால் தான் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொள்ள வைத்துள்ளது. இதனிடையே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் தக்க உத்தரவை பிறப்பிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











