அவரு மட்டும் வாய்ப்பு கொடுக்கலைன்னா தற்கொலை பண்ணியிருப்பேன்.. ’சொல்லாமலே’ லிவிங்ஸ்டன் ஓபன் பேட்டி!
சென்னை: பாக்கியராஜின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் வில்லனாகவும், ஹீரோவாகவும் குணசித்ர நடிகராகவும் காமெடியனாகவும் மாறிய நடிகர் லிவிங்ஸ்டனின் பிரத்யேக பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவாக நடிக்க ஆசைப்படலாமா என லிவிங்ஸ்டனை பார்த்தும் பலரும் அப்பவே ட்ரோல் செய்த நிலையில், தனக்கான கதையை உருவாக்கி சொல்லாமலே, சுந்தரபுருஷன் என ஹிட் ஹீரோவாக மாறியவர் லிவிங்ஸ்டன்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தில் லிவிங்ஸ்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், தனது குருநாதர் பாக்கியராஜ் பற்றி லிவிங்ஸ்டன் உருக்கமாக பேசிய பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி: 65 வயதாகும் நடிகர் லிவிங்ஸ்டன் இன்னமும் சினிமா மற்றும் சீரியல் என படுபிசியான நடிகராக வலம் வருகிறார். காமெடி நடிகராகவும் மிரட்டல் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த லிவிங்ஸ்டன் பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் தான் எப்படி ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன் என்கிற சுவாரஸ்ய சம்பவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
பாக்கியராஜின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த லிவிங்ஸ்டன் ஸ்டேஷன் மாஸ்டராக நடிக்க வந்த நடிகரிடம், சில வசனங்களை சொல்லி பேச சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த நடிகருக்கு வசனங்கள் சரியாக உச்சரிக்கவே வரவில்லையாம். நேரம் ஆவதையும் தான் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்கியராஜ் நீயே கோட் மாட்டிக்கிட்டு அந்த சீனை நடிச்சிடு, இன்னைக்கு நிறைய சீன் எடுக்கணும், இந்த ஒரு சீனிலேயே டைம் வேஸ்ட் பண்ண முடியாது என பட்டென சொல்ல அப்படித்தான் சினிமாவில் நடிகராக 1982ம் ஆண்டு அறிமுகமானார் லிவிங்ஸ்டன்.
தற்கொலை செய்திருப்பேன்: அதற்கு முன்னதாக அந்த 7 நாட்கள் படத்தின் போது பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக சேருவதற்கு பல ஆண்டுகள் போராடி வந்தேன். என்னிடம் உதவி இயக்குநராக சேர ஏன் ஆசைப்படுற என்றும் எங்கிட்ட சேரணும்னா வெயிட் பண்ணனும் என்றார்.
நானும் 3 வருஷம் காத்திருந்தேன், அவரது வீட்டு வாசலிலேயே வெயிட் பண்ணுவேன், அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் செல்வேன். ஒரு கட்டத்தில் எனக்கும் எங்கப்பாவுக்கும் பிரச்சனை வெடித்து வீட்டை விட்டே வெளியேறிவிட்டேன். அப்போதான் கடைசியா பாக்கியராஜ் சாரிடம் போய் சான்ஸ் கேட்போம் தரலைன்னா தற்கொலை பண்ணிப்போம் என்றே நினைத்து விட்டு அவரிடம் போய் அழுது என்னோட தற்கொலை எண்ணத்தையும் சொன்னேன்.
அவரு உடனே பதறிப்போய் அழாதப்பா, இதுக்காக தற்கொலை பண்ணிக்கலாம் கூடாதுன்னு சொல்லிட்டு உடனடியாக என்னை அசிஸ்டன்ட் ஆக சேர்த்துக் கொண்டார். அவரால் தான் இன்று நான் இப்படி வாழ காரணமே என லிவிங்ஸ்டன் உருக்கத்துடன் பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











