அலைபாயுதே மேடி டூ பத்மஸ்ரீ மாதவன்.. குடியரசுத் தலைவர் கைகளால் விருது பெற்று மாஸ் காட்டிய மாதவன்!
புதுடெல்லி: இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் 'சாக்லேட் பாய்' ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.
அலைபாயுதே மேஜிக்: ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் மாதவன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த இவரை, முன்னணி இயக்குனரான மணிரத்னம் தனது 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்த மாதவன், தொடர்ந்து மின்னலே, ரன், ஆயுத எழுத்து எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் நடிகராக மாறினார்.

'ராக்கெட்டரி' விஞ்ஞானி நம்பி நாராயணன்: தமிழைத் தொடர்ந்து இந்தி திரையுலகில் கால் பதித்த மாதவன், நடிகராக மட்டுமில்லாமல், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாறினார். மாதவனின் கடின உழைப்பால் இந்தப் படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
குவியும் வாழ்த்து: இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் மாதவனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் கைகளால் அந்த விருதை மாதவன் பெற்றுக் கொண்டார். தொலைக்காட்சியில் பயணத்தைத் தொடங்கி, இன்று இந்திய அரசிடம் இருந்து 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெருமைப்பட வைத்துள்ள நடிகர் மாதவனுக்கு, திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications