அடக்கடவுளே நடிகர் மகேஷ் பாபுவையும் விட்டு வைக்காத கொரோனா.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
ஹைதராபாத்: டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தொடங்கி டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்களை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தற்போது ட்வீட் போட்டு நடிகர் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து அறிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் கொரோனா
2020ம் ஆண்டு எந்த அளவுக்கு வீரியத்துடன் உலகத்தையே அலற வைத்ததோ கொரோனா வைரஸ். அதை விட வித விதமான வேரியன்ட்களுடன் மீண்டும் உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். டெல்டா கடந்த ஆண்டு மக்களை பாதித்த நிலையில், தற்போது ஓமிக்ரான் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி உள்ளது.

மகேஷ் பாபுவுக்கு கொரோனா
சாமானிய மக்கள் மட்டுமின்றி பெரும் பாதுகாப்புடன் இருக்கும் பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லேசான கொரோனா
பயப்படும் அளவுக்கு கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்படவில்லை என்றும் மைல்டு கொரோனா மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் நடிகர் மகேஷ் பாபு தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தி ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

தடுப்பூசி முக்கியம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு முழு பாதுகாப்புடன் இருந்த நிலையிலேயே எதிர்பாராதவிதமாக தன்னை கொரோனா பாதித்துள்ளது என்றும் இதுவரை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் இருந்தால் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் பெரிய பாதிப்பு வராமல் அது தான் நம்மை காக்கும் என்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மட்டுமின்றி ராம்சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என ஏகப்பட்ட டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் மகேஷ் பாபு விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்
நடிகர் மகெஷ் பாபு நியூ இயர் கொண்டாட்டத்தை தனது குடும்பத்தினருடன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடி மகிழ்ந்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில், தான் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று பாதித்து இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமல் முதல் மீனா வரை
உலகளவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், வைகைப்புயல் வடிவேலு, நடிகை மீனா உள்ளிட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார். வெளியே செல்லும் போது முகக் கவசத்தை மறக்காமல் போட்டுச் செல்லவும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











