மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. வழக்கம்போல பூஜைக்கு வராமல் எஸ்கேப்பான நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக தன்னுடைய ஆவணப்படம் தொடர்பாக இங்கு ஒரு பிரளயத்தையே உண்டு செய்துவிட்டு கூலாக பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டார்.
தன்னுடைய ஆவணப்படத்தின் சில கிளிப்பிங்கிற்காக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் இங்கு விமர்சனங்களை பதிவு செய்த நிலையில், நயன்தாராவிற்கு ஆதரவாக அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதிஹாசன், பார்வதி உள்ளிட்டவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

மம்முட்டி & மோகன்லால் கூட்டணி: மலையாளத்தின் முன்னணி ஹீரோக்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருமே அடுத்தடுத்து தங்களது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றனர். அவர் ஆக்ஷன் திரில்லரில் நடித்தால் இவர் சைக்காலஜிகல் திரில்லரில் நடிக்கிறார். ஆரோக்கியமான போட்டி இவர்களிடையேயும் இவர்களை கொண்டாடும் ரசிகர்களிடையேயும் காணப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதியபடத்தில் இணைந்துள்ளனர். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.

நாயகியாக இணைந்த நயன்தாரா: இந்தப் படத்தில் மம்முட்டி -மோகன்லால் மட்டுமில்லாமல் பகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த பூஜையில் மோகன்லால் பங்கேற்று குத்துவிளக்கேற்றி படத்தை துவங்கி வைத்துள்ளார். இதனிடையே படத்தின் பூஜையில் நடிகர் மம்முட்டி மற்றும் நயன்தாரா இருவரும் பங்கேற்கவில்லை. மலையாள சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கவுள்ளார். மேலும் சிஆர் சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல்கட்ட சூட்டிங்: இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் இலங்கையில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி மற்றும் கொச்சி ஆகிய இடங்களிலும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடக்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். தொடர்ந்து படத்தின் சூட்டிங் 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் நாராயணனே எழுதியுள்ள நிலையில், பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிட்டான கேரக்டரில் நயன்தாரா: இந்தப் படத்தில் மேலும் ரஞ்சி பணிக்கர், ராஜிவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், இயக்குநர் பிரகாஷ் பெலவாடி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்துள்ள இந்தப் பட,த்தில் நயன்தாரா யாருக்கு ஜோடியாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மலையாளத்தில் அடுத்தடுத்து வெயிட்டான ரோல்களில் நடித்துவரும் நயன்தாராவிற்கு இந்தப்படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











