42 ஆண்டாக என்னோடு நீங்கள்.. என் பலமே என் ரசிகர்கள் தான்… நடிகர் மம்முட்டி பேச்சு!
சென்னை: மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் ரசிகர்களால் மம்மூக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். டர்போ ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி ரசிகர்கள் தான் என் பலம் என்றார்.
1971 ஆம் ஆண்டு வெளியான அனுபவன் பாலிச்சக்கல் என் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மம்மூட்டி, குடும்பச் சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் வேலையை செய்து வந்தார். இதையடுத்து சில ஆண்டுகள் எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய விள்கனுண்டு ஸ்வப்னங்கள் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, 80 காலகட்டத்தில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தைப் பெற்றார் மம்மூட்டி.

நடிகர் மம்முட்டி: பெரிய இயக்குநர்களுடனும் அதே நேரத்தில் அறிமுக இயக்குநர்களுடனும் சேர்ந்து மாலிவுட்டில் கலக்கி வந்த மம்முட்டி, தமிழில், மெளனம் சம்மதம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தின் நண்பனாக நடித்தார். அந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், அந்த படத்தில் நடித்த தேவாவின் கதாபாத்திரத்தை இன்றளவு யாரும் மறந்துவிட முடியாது. இதைத் தொடர்ந்து ஆனந்தம், மறுமலர்ச்சி, ராம் இயக்கிய பேரன்பு படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்தார்.
டர்போ திரைப்படம்: கோலிவுட்டில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் மம்முட்டியின் நடிப்பில் அண்மையில், பிரம்மயுகம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் தமிழகத்திலும் கணிசமான வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து, 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வைசாக் இயக்கி உள்ளார். இவர் மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர், சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
என் பலமே ரசிகர்கள் தான்: இப்படம் 23ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி, என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள் தான் என்றும், அவர்கள் தான் 42 வருடங்களாக என்னோடு நிற்கின்றார்கள், எனக்காக தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் நடிக்கிறேனோ அத்தனை ஆண்டுகள் அவர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











