உன் படத்தை முடிக்காமல் சாகமாட்டேன்.. டெல்லி கணேஷ் சொன்ன அந்த வார்த்தை.. கண்கலங்கிய மணிகண்டன்!
சென்னை: டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு, சீனியர் நடிகராக இருந்தாலும், இப்போது தான் சினிமாவிற்கு வந்து வாய்ப்பு தேடுபவர் போல நடந்து கொள்வார். அவரது பண்பு யாருக்கும் வராது என்று மணிகண்டன் கண்கலங்கி பேசினார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பலத் திரைப்படத்தில் வலம் வந்தவர் தான் நடிகர் டெல்லி கணேஷ். 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். 80களின் கால கட்டம் முதல் இப்போது வரை பல ஹீரோக்களின் படங்களில் அவர்களின் நண்பனாக, அண்ணாக, தம்பியாக பல கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.குறிப்பாக கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமான நாயகன் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக அந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், போலீஸ்க்காரர்கள் சேர்ந்து மிதிச்சி வேலுநாயக்கர் எங்கே என்று கேட்டார்கள். ஆனால், நான் வாயே துறக்கவில்லை என்ற சீனில் கைத்தட்டலை பெற்று இருப்பார். இதுமட்டுமில்லாமல் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் எதுவும் தெரியாத அப்பாவாக நடித்திருந்தார்.

நடிகர் டெல்லி கணேஷ்: தனது 80வது வயதிலும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து நடித்து வந்தார்.இந்த ஆண்டில் வெளியான அரண்மனை 4 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்த இவர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு நாளை 11 மணி அளவில் நடைபெறும் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் சொன்ன வார்த்தை: இந்நிலையில், டெல்லி கணேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மணிகண்டன், "2010ஆம் ஆண்டு இந்த வீட்டின் முன்பு நான் நின்றிருந்தேன். அப்போது என்னை அழைத்து யார் வேண்டும் என கேட்டார். உங்களைத்தான் பார்க்க வந்தேன் எனக் கூறினேன். அப்போது உள்ளே அழைத்து கதை கேட்டார். அப்போ நான் ரொம்ப சின்ன பையன் ஷார்ட் பிலிம் எடுக்கிறேன் என்றேன். ஒரு சீனியர் நடிகரான அவர் என்னை நம்பி அந்த கதையில் நடிக்க வேண்டும் என அவசியம் இல்லை. நான் அவர் வாங்கிய சம்பளத்தில் பாதிக்கூட தரவில்லை, பெரிய நடிகருக்கு செய்ய வேண்டிய எந்த வசதியையும் நான் அவருக்கு செய்து கொடுக்கவில்லை. இருந்தாலும் எந்த குறையும் கூறாமல் எனக்காக நடித்துக் கொடுத்தார்.
கண்கலங்கிய மணிகண்டன்: நான் அந்த படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது, உடனே நான் பயந்துபோய் அவருக்கு போன் செய்து இந்த மாதிரி வதந்தி பரவுது என்று சொன்னேன். அப்போது, அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், பயப்படாதே., உன் படத்தை முடிக்காமல் சாகமாட்டேன்' என்று கூறினார். சீனியர் நடிகராக இருந்தாலும், இப்போது தான் சினிமாவிற்கு வந்து வாய்ப்பு தேடுபவர் போல நடந்து கொள்வார் அவரது பண்பு யாருக்கும் வராது என்று மணிகண்டன் கண்கலங்கி பேசினார்.


Click it and Unblock the Notifications











