Lover box office: காதல்னாலே டார்ச்சர் தானா.. காதலை அழகாக சொன்ன லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல்!
சென்னை: அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் லவ்வர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் முதல் நாள் எவ்வளவு வசூலை பெற்று உள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் மணிகண்டன். காலா படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருந்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது நல்ல கதையை தேடி தேடி நடித்து வரும் மணிகண்டன் நடிப்பில் அண்மையில், குட்நைட் திரைப்படம் வெளியாகி வசூலை கணிசமாக அள்ளியது. பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குட் நைட் படம் பெற்றது.

மணிகண்டனின் லவ்வர்: குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லவ்வர் படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை, பிரபுராம் வியாஸ் இயக்கி உள்ளார். இதில், மணிகண்டன் மாடர்ன் லவ் ஆந்தாலஜி, ஸ்ரீகெளரி பிரியா, கண்ணாரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் கதை: இந்த உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை, அந்த காதலும் அளவிற்கு மீறி, அதீத காதலாக மாறும் போது, நான் உனக்கு முக்கியம் இல்லையா, யார் கூடயும் பேசாதே, எனக்கு மட்டும் தான் நீ என காதல் ஆரம்பிக்கும் போது பேசும் வார்த்தைகள் காலம் செல்ல செல்ல கசந்து விடுகிறது. இதை லவ்வர் படத்தின் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். இதில், மதுவுக்கு அடிமையான மணிகண்டன் சொந்தமாக ஒரு கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். அவரும், ஐடியில் பணிபுரியும் ஸ்ரீகவுரி ப்ரியா கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே காதலிக்கின்றனர்.

கடைசியில் என்னாச்சு: ஆறு வருடமாக காதலித்து வரும் இவர்களின் காதல், கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத் தொடங்குகிறது. இவருடன் பேசாதே, அவருடன் பழகாதே, என்கிட்ட சொல்லாமல் வெளியே போகக்கூடாது என, காதலி பிரியாவிற்கு உத்தரவு போடுகிறான் மணிகண்டன். அதன் விளைவாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. இந்த விரிசல் இவர்களிடம் பிரிவை ஏற்படுத்த இவர்கள் காதல் ஜெயித்ததா, தோற்றதா என்பது தான் லவ்வர் திரைப்படத்தின் கதை.
முதல் நாள் வசூல்: இந்த திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடி என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் நடித்த லால் சலாம் படத்தோடு இந்த திரைப்படம் வெளியானதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு காதலர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், வரும் நாட்களில் இப்படம் கணிசமான வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











