மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரம்.. ரூ.1 லட்சம் அபராதம்.. தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இதையடுத்து, மன்சூர் அலிகான், நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன் அது இல்லாமல் போய்விட்டது என பேசி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரம்: இதையடுத்து, மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்
ரூ.1 லட்சம் அபராதம்: இதன்பின் நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் நடிகர் குறித்துத் அவதூறாக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு எதிராக மற்ற நடிகர் பேசியது இயல்பானது என்பதால், மானநஷ்ட வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என கூறி, அவதூறாக கருத்துத் தெரிவித்த மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தார்.
நிதி நெருக்கடியில் இருக்கிறேன்: இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான ஒரு லட்சத்தை செலுத்துவதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.. இதை கேட்ட நீதிபதி, ஒருவரை பற்றி கருத்துத் தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி, மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தார்.
நீதிமன்றம் மறுப்பு: இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.மேலும், அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











