வேதனையா இருக்கு.. சிறுநீரகம் செயலிழந்துருச்சுனு சொல்றாங்க.. கண்கலங்கிய மன்சூர் அலிகான்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணுவின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல்நிலைகுறித்து விசாரித்த நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களிடம் பேசும் போது கண்கலங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணு உடல்நிலை பிரச்னை காரணமாக, தீவிர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி இருந்தார். ஆனால், திடீரென அவரின் உடலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த 20 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

மன்சூர் அலி கான் கண்ணீர்: இதையடுத்து இன்று நடிகர் மன்சூர் அலிகான், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்று நல்ல கண்ணுவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோழர் ஐயா நல்ல கண்ணு அவர்கள், சிறுவனாக இருக்கும்போதே பள்ளிக்கூடத்திலேயே, வெள்ளையனுக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறு வயதிலேயே தனது போராட்டத்தை ஆரம்பித்து விட்டார். வாழ்நாள் முழுக்க ஒரு போராளியாக எளியவர்களின் பக்கம் இருந்தார். "தோன்றின் புகழோடு தோன்றுக தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற திருக்குறலுக்கு ஏற்றபடி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, ஒரு உன்னத மனிதராக இதுவரை வாழ்ந்து, இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்.
சிறுநீரகம் செயலிழந்துவிட்டது: ஐயா நல்ல கண்ணு அவர்கள் சுதந்திர போராட்டத்திற்கு பிறகும் இவரை கைது செய்தது. அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு சுதந்திர இந்தியாவிலேயே ஏழு, எட்டு வருடங்கள் சிறையில் இருந்தார். பல விதமான துன்புறுத்தல்களை சந்தித்தபோதும் அவர் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல், கொள்கை பிடிப்புடன் தொழிலாளர்களின் பக்கம் இன்று வரை வாழ்ந்து கொண்டிருந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என மருத்துவர்கள் சொல்கிறார்கள். டயாலிசிஸ் செய்ய முடியாது என்கிறார்கள். அவரின் முகம் கருத்து விட்டது. இதிலிருந்து மீண்டு அவர் இந்த பூமியில் மீண்டும் வாழ இறைவன் வழி செய்ய வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications