குழம்பிய மன்சூர் அலிகான்.. முன் ஜாமீன் மனு வாபஸ்.. நீதிமன்றம் விளையாட்டு மைதானமா.. டென்ஷனான நீதிபதி!
சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் தவறான காவல் நிலையத்தை எதிர் மனுதாரராக சேர்த்ததால் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமின் மனு வாபஸ் பெற்றார்.
நடிகை த்ரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.

தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர் 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் மனு: இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, த்ரிஷா குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் நான் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி கேள்வி: இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்.. இப்போது மனுவை வாபஸ் பெற காரணம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், எதிர்மனு தாரராக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்து உள்ளதால் இந்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
நீதிமன்றம் விளையாட்டு மைதானமா: இதை கேட்ட நீதிபதி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல, இது போன்று நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி மனுவை வாபஸ் பெற அனுமதித்தார். இதனிடையே, மன்சூர் அலிகான் புதிதாக முன் ஜாமீன் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நாளைக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











