பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
சென்னை: வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு என்று வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து புதன்கிழமையுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரம் முடிவடைந்தது .

மன்சூர் அலிகான்: வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மன்சூர் அலிகான், பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி புதன்கிழமை வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் மயக்கம்: இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான், வேலூரில் என்னை கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ், மோர் கொடுத்தாங்க. அதை குடிச்ச உடனே மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து, பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்காததால், சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூல அட்மிட் பண்ணி இருக்காங்க என்று கூறியிருந்தார்.
வாக்குவாதம் செய்த மன்சூர்: இதையடுத்து, வாக்குப்பதிவு நாளான இன்று கையில் ஐவியூடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த மன்சூர் அலிகான், வாக்குச்சாவடியில் மக்கள் அனைவரும் நின்று கொண்டு இருக்க, அங்கு ஒட்டி வைக்கப்பட்டிருந்த வாக்கு சின்னத்தைப் பார்த்துவிட்டு இதுல ஏன் பலாப்பழம் இவ்வளவு இருட்டா இருக்கு என்றார். இதைப்பார்த்தா பலாப்பழம் போலவே தெரியவில்லையே இதைப்பார்த்து மக்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள் என்று வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.


Click it and Unblock the Notifications











