Marimuthu: டப்பிங் செய்தபோது மாரடைப்பு.. அங்கேயே உயிரிழந்த நடிகர் மாரிமுத்து!
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து இன்றைய தினம் மாரடைப்பால் காலமானார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் மாரிமுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
57 வயதான மாரிமுத்து இழப்பு ஈடு செய்ய முடியாதது என பிரபலங்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

டப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த மாரிமுத்து: நடிகர் மாரிமுத்து பல படங்களில் நடித்து வருபவர். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் மாரிமுத்து நடித்திருந்தார். வில்லன் கேங்கில் இருந்தாலும் ரஜினியுடன் இவருக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் காணப்பட்டது. நடிகர், இயக்குநர் சீரியல் நடிகர் என பன்முகம் காட்டி வந்த மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் மூலம் அதன் ஆதி குணசேகரன் கேரக்டர் மூலம் ஏராளமான ரசிகர்களை சமீப காலங்களில் கட்டிப் போட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இவரது பல வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஏம்மா ஏய் என்ற வசனம் இவருக்கான அடையாளமாகவே மாறியது. இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அவருக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் தொடாந்து சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சீரியல், படங்கள் என அடுத்தடுத்து பிசியாக நடித்துவந்த மாரிமுத்துவின் இந்த திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் 8.30 மணியளவில் மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாக அவருடன் இருந்தவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 1994ம் ஆண்டில் பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மாரிமுத்துவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இயக்குநராகவும் கண்ணும் கண்ணும், புலிவால் என இரு படங்களை இயக்கியுள்ளார் மாரிமுத்து. இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில்தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களமிறங்கி கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்து வந்தார். குறுகிய காலத்திலேயே இந்த தொடர் மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்துள்ளது. அந்த கேரக்டருக்கு அவரும் மிகப்பொருத்தமாக அமைந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது முடிவு சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முன்னதாக பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் மாரிமுத்து. ஜோதிடர்கள் குறித்த ஒரு ஷோவில் பங்கேற்ற மாரிமுத்து, அவர்களால்தான் நாடு வளர்ச்சி காணாமல் உள்ளதாக தெரிவித்திருந்தார். சுனாமி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணித்து கூறியிருக்கலாமே என்று கேள்விகளை தொடர்ந்து அடுக்கிய மாரிமுத்து மீது, ஜோதிடர்கள் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்ததும் சமீபத்தில் நடந்தது.


Click it and Unblock the Notifications











