Marimuthu: மாமா கலக்குறாரு.. மனைவியின் பெருமிதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாரிமுத்து!
சென்னை: நடிகர் மாரிமுத்து இன்று காலை எதிர்நீச்சல் தொடருக்கான டப்பிங்கின்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சமீப காலங்களில் மிகவும் பரபரப்பான தருணங்களை தன்னுடைய சீரியல் மூலமும் பேட்டிகளின்மூலம் கொடுத்துவந்தார் மாரிமுத்து.
ரஜினியின் ஜெயிலர் படத்திலும் கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார் மாரிமுத்து. இயக்குநர், நடிகர், சீரியல் நடிகர் என பன்முகத் திறமைகளோடு வலம்வந்தவர்.

மனைவி குறித்து பெருமிதம் தெரிவித்த நடிகர் மாரிமுத்து: நடிகர், இயக்குநர், சீரியல் நடிகர் என பன்முகத்திறமையோடு வலம் வந்தவர் மாரிமுத்து. நடிப்பு, இயக்கம் என கலக்கிவந்தாலும் இவரை அதிகமாக ரசிகர்களிடையே கொண்டு சென்றது எதிர்நீச்சல் சீரியல்தான். திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்துவந்த குணசேகரன் கேரக்டர், இந்தத் தொடரை எராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்து, அதிகமான டிஆர்பி புள்ளிகளையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் டப்பிங்கின்போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து தானே காரை ஓட்டிக் கொண்டு, இவர் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் மாரிமுத்துவின் உடல் தேனி மாவட்டத்தில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1994ம் ஆண்டில் பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார் மாரிமுத்து. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி குறித்து மாரிமுத்துவின் பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. சீரியல், படங்கள் மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ள மாரிமுத்து ட்விட்டரிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரது மறைவு கோலிவுட்டில் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமி தன்மீது கொண்ட அளவுக்கதிகமான நம்பிக்கை காரணமாக தன்னுடன் ஓடி வந்ததாக மாரிமுத்து தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
என்றாவது ஒருநாள் எதையாவது சிறப்பாக செய்துவிடுவார் என்ற தனது மனைவியின் நம்பிக்கைக்கு தற்போது வெகுமதி கிடைத்துள்ளதாக மாரிமுத்து அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய மனைவி மகிழ்ச்சியாக, ரிலாக்சாக இருப்பது தனக்கு எனர்ஜியை கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே மிகப்பெரிய பலமாக உள்ளதாகவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் வந்து மிகப்பெரிய கஷ்டங்களை தன்னுடைய மனைவி அனுபவித்ததை சுட்டிக் காட்டிய மாரிமுத்து, பொது இடங்களுக்கு தாங்கள் இருவரும் போகும்போது ரசிகர்கள் தனக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்து, புகைப்படம் எடுக்க முண்டியடிப்பதை பார்த்து தன்னுடைய மனைவி முகத்தில் ஒரு பெருமை ஏற்படுவதை தான் பார்ப்பேன் என்றும் மாரிமுத்து அந்த பேட்டியில் கூறியுள்ளார். அடடா நம்மோட மாமா கலக்குராரு என்று தன்னுடைய மனைவி உள்ளம் பூரிப்பதை பார்த்து தான் மகிழ்ச்சியடைவேன் என்று அந்தப் பேட்டியில் மாரிமுத்து கூறியுள்ளார். தன்னுடைய மனைவி குறித்து இவ்வளவு பெருமையாக பேசிய மாரிமுத்து தற்போது அவர்களுடன் இல்லாதது மிகப்பெரிய இழப்பு.


Click it and Unblock the Notifications











