Mayilsamy: மறக்க முடியுமா இவரை.. மயில்சாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. ரசிகர்கள் அஞ்சலி!
சென்னை: உயிரோடு இருக்கும் வரையில் கொடை வள்ளலாக திகழ்ந்த நடிகர் மயில்சாமி காற்றில் கலந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரை அவரது ரசிகர்கள் நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவருமான மயில்சாமி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர கதாபாத்திரம், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவராக இருந்தார். இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால், சினிமாவில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் இருந்தார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி: இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணிக்கனவுகள் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று யாருக்கும் தெரியாமலே வந்து சென்றார். இதையடுத்து, கன்னிராசி படத்தில், கவுண்டமணி, போட்டோவுக்கு மாலை போட்டுக்கொண்டு இருக்கும் போது, பெரியவரே...என அழைத்துக்கொண்டு தலையில் கூடையுடன் டவுசர் போட்டுக்கொண்டு முதல் வசனம் பேசினார். சிறு சிறு கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர், விவேக், வடிவேலு கூட்டணியில் செய்த காமெடிகள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
மாரடைப்பால் உயிரிழந்தார்: காமெடியில் கலக்கிக்கொண்டிருந்த மயில்சாமி, கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி உயிரிழந்தார். தீவிர சிவபக்தரான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டுவிட்டு, அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலிப்பதாக கூறிய, சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்து உயிரிழந்தார்.
திரைப்பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி: அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து மயில்சாமி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்கள். அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முதலாமாண்டு நினைவு தினம்: இந்நிலையில் இன்று, மயில்சாமியின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது இல்லத்தில் நடைபெற்ற பூஜையில் மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும், மயில்சாமியின் தீவிர ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். காலம் மயில்சாமியை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டாலும், அவரின் வள்ளல் குணத்தால் என்றும் மயில்சாமி நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.


Click it and Unblock the Notifications











