மயில்சாமியிடம் கடைசியாக இருந்த பணம் இவ்வளவு தான்... அப்பாவின் ஆசையை நினைத்து கண்கலங்கிய மகன்கள்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த மாதம் 19ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சிறந்த நடிகராக மட்டுமின்றி பலருக்கும் உதவி செய்து வந்த மயில்சாமியின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மயில்சாமி நடித்த கடைசிப் படமான கிளாஸ்மேட்ஸ் முதல் பாடல் 'கண்ணு முன்னே' வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் மயில்சாமியின் மகன்கள் இருவரும் கலந்துகொண்டு, அவர்களது அப்பாவின் நினைவுகளை கண்ணீர்மல்க பகிர்ந்துகொண்டனர்.

மயில்சாமியின் கடைசிப் படம்
மிமிக்ரி கலைஞர், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் மயில்சாமி. அதன்பின்னர் கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த அவர், கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மயில்சாமி கடைசியாக கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மயில்சாமியின் நினைவேந்தல்
இந்நிலையில், மயில்சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. பிரித்வி இசையில் 'கண்ணு முன்னே' எனத் தொடங்கும் இந்த பாடலை ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார். சீர்காழி சிற்பி இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். சரவண சக்தி இயக்கியுள்ள கிளாஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் இருவரும் கலந்துகொண்டனர்.

மகன்கள் உருக்கம்
இந்நிகழ்ச்சியில், நடிகர் மயில்சாமிக்கு நினைவேந்தலும் செய்யப்பட்டது. இதில், மூத்த காமெடி நடிகர் செந்தில் உட்பட பலரும் பங்கேற்றனர். அப்போது மயில்சாமியின் மகன்கள் இருவரும் அவர்களது அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மூத்த மகன் அன்பு கூறுகையில், அப்பா எப்போதும் எங்களை நண்பர்களைப் போல நடத்துவார். இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் எனக் கூறுவார். அவரது வாழ்நாளில் மற்றவர்களுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்தியதே இல்லை என்றார்.

கடைசி ஆசை
மேலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் அவருக்கு ரோல் மாடல். எங்களுக்கு எம்ஜிஆரை தெரியாது ஆனால், எங்கள் அப்பா மயில்சாமி உதவியதை பார்த்து நாங்கள் எம்ஜிஆர் யார் என தெரிந்துகொண்டோம் எனக் கூறினர். பணம் இல்லாத நேரத்தில் யாரும் உதவிக்கேட்டு வந்தால், கடவுளிடம் சண்டை போடுவார். "எங்கிட்ட பணம் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் என்னிடம் உதவிக் கேட்டு மத்தவங்கள அனுப்பி வைக்குற" என உரிமையோடு கடவுளிடம் கோபம்கொள்வார் என பேசினர். அதேபோல், நாங்கள் ஆசைப்பட்டதெல்லாம் இருவருமே நல்ல நடிகர்களாக வருவதை அப்பா பார்க்க வேண்டும் என்பதை தான். அதுதான் நாங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை எனக் கூறினர்.

கடைசியாக இருந்த பணம்
அப்போது மயில்சாமியுடனயே இருக்கும் சக்தி என்பவரை அவரது மகன்கள் அறிமுகம் செய்துவைத்தனர். மேடையேறிய சக்தி, "மயில்சாமி கடைசியாக ஒரு படத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார். அதில், 25000 ஒருவருக்கும், எனக்கு கொஞ்சம் பணமும், மிச்சம் இருந்த ஆயிரம் ரூபாயை அவரது மகன்களுக்கும் கொடுத்தார். எல்லாம் கொடுத்துவிட்டு கடைசியாக அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான் என கண்ணீர் வடித்தார்.

மயில்சாமியின் மகன்கள்
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு அல்டி, சிதம்பரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது லால் சலாம் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இளைய மகன் யுவன் பா. ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக 'என்று தணியும்', சத்யராஜ்ஜின் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களிலும் யுவன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











