பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம்
சென்னை: பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் சென்னை வடபழனி குமரன் காலனி 9வது தெருவில் இருக்கும் பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 85 வயதான அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவர் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும், ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

முதலில் எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் வாசிப்பார், பல்வேறு ஒலிகளை எழுப்புவார். பின்னர் அவர் நடிகர் ஆனார். விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். கடைசியாக அவர் சேரனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்தார்.
அவர் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











