விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் என்னதான் பிரச்னை - ரகசியம் பகிர்ந்த பிரபலம்
சென்னை: வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்.
வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர். என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமான பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வியையே சந்தித்தது.

உச்சத்தில் இருந்த வடிவேலு
2000த்திலிருந்து 2011வரை கேரியரின் உச்சத்தில் இருந்தார் வடிவேலு. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என பார்க்காமல் அனைத்து படங்களிலுமே நடித்தார். அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. மேலும் அந்தக் காட்சிகள் காலம் கடந்து நிற்பவையாகவும் அமைந்திருந்தது தனி சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது

வடிவேலுவை சுற்றிய பிரச்னை
நிலைமை இப்படி சீராக போய்க்கொண்டிருக்க வடிவேலு அரசியல் மேடையில் ஏறினார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சூறாவளி பரப்புரை செய்தார். அவரது பேச்சு சில இடங்களில் ரசிக்கும்படியும், சில இடங்களில் முகம் சுளிக்கும்படியும் அமைந்திருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக அரியணை ஏற வடிவேலுவின் கிராஃப் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்தே ஒதுங்கினார் வடிவேலு.

விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் பிரச்னை
வடிவேலுவின் பரப்புரையில் அவர் அதிகம் டார்கெட் செய்தது அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைத்தான். விஜயகாந்த்துடன் நெருங்கி பழகியவர் என கூறப்படும் வடிவேலு எதற்காக விஜயகாந்த்தை இவ்வளவு தாக்கி பேசுகிறார் என்பது யாருக்கும் விளங்கவில்லை. அதேசமயம் விஜயகாந்த் மீது வடிவேலுவுக்கு ஏற்கனவே இருந்த மனக்கசப்பை தேர்தல் பரப்புரையை பயன்படுத்தி பேசி தீர்த்துக்கொள்கிறார் எனவும் பேசப்பட்டது. ஆனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு எங்கிருந்து ஆரம்பித்தது என யாருக்கும் தெரியாமல் இருந்தது.

பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது?
இந்நிலையில் நடிகரும், விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளருமான மீசை ராஜேந்திரன் இருவருக்கும் எங்கிருந்து பிரச்னை ஆரம்பித்தது என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "விஜயகாந்த்தின் அக்கா கணவர் இறந்துவிட்டார். அவரது வீடு வடிவேலுவின் அலுவலகத்துக்கு அருகே அமைந்திருந்தது. அப்போது துக்கம் விசாரிப்பதற்காக பலரும் விஜயகாந்த்தின் அக்கா வீட்டுக்கு சென்றிருந்தனர். அந்த சமயத்தில் காரை வடிவேலுவின் ஆஃபிஸ் முன் நிறுத்தும்படி ஆகிவிட்டது. அப்போது அலுவலகம் வந்த வடிவேலு இதை பார்த்து கோபப்பட்டு அந்த இடத்திலேயே சண்டைக்கும் சென்றுவிட்டார். இதுதான் இருவருக்குமான பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என நினைக்கிறேன்.

சொக்கத்தங்கத்தில் நடிக்க மறுத்த வடிவேலு
அதேபோல் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் படத்தில் நடிப்பதற்காக முதலில் வடிவேலுவிடம்தான் பேசப்பட்டது. ஆனால் அவரால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனையடுத்துதான் அந்தப் படத்துக்குள் கவுண்டமணி வந்தார். ஆனால், சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடிக்கக்கூடாது என்பதில் கவுண்டமணி மிகவும் தீவிரமாக இருந்தார். விஜயகாந்த்தோ இயக்குநர் உதயகுமாரிடம் சென்று, 'இந்தப் பையனை (வடிவேலு) படம் முழுக்க எனக்கு குடை பிடித்துவரும்படி காட்சிகளை வைத்துவிடுங்கள்' என சிபாரிசு செய்தார் என்று ராஜேந்திரன் கூறினார்.


Click it and Unblock the Notifications











