Mohan: மோகனின் பயணங்கள் முடியவில்லை.. வெளியானது ஹரா படத்தின் ட்ரெயிலர்!
சென்னை: மூடுபனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் மோகன். தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோயில், மௌன ராகம், பிள்ளை நிலா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் தனது நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த மோகன், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மோகன். இதனிடையே ஹரா என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள நிலையில் படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகர் மோகன்: நடிகர் மோகன் வெள்ளி விழா நாயகனாக 90களில் கலக்கியவர். இவரது அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மௌன ராகம், பயணங்கள் முடிவதில்லை என இவரது படங்கள் இவருக்கே போட்டியாக திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட காலங்களாக மோகன் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையுடன் இவர் தனக்கு வந்த வாய்ப்புகளை மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மோகன், நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார்.
கோட் பட வில்லன்: கோட் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள நிலையில். படத்தில் மோகன் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் தனது பேட்டியொன்றில் பேசியிருந்தார் மோகன். இந்நிலையில் இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ஹரா. நீண்ட காலங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வந்த சூழலில் கடந்த மாதத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் மிரட்டலான அளவில் வெளியாகியுள்ளது.
ஹரா பட ட்ரெயிலர்: தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் ஹரா படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மோகனுடன் அனுமோல், யோகிபாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா, மைம் கோபி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ள ஹரா படத்தின் டீசர் கடந்த மாதத்தில் வெளியானநிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி அதிரடி காட்டியுள்ளது.
தாதாவாக நடிக்கும் சாருஹாசன்: 93 வயதான நடிகர் சாருஹாசன் ஹரா படத்தில் தாதாவாக நடித்துள்ளார். ஆனால் எதிர்மறையாக இல்லாமல் சமூகத்திற்கு நல்லது செய்யும் தாதாவாக அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் முழுமையாக கோவையில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மோகனுக்கு மீண்டும் சிறப்பான வெற்றியை பெற்றுத் தரும் என்று முன்னதாக டீசர் வெளியீட்டின்போது தயாரிப்புத் தரப்பு நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











