பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.. பிரபல நடிகர் கொந்தளிப்பு!
சென்னை: கோவை பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கொதித்துள்ளார்.
கோவையில் பிரபல தனியார் பள்ளி மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் எம்எஸ் பாஸ்கர் கண்டனம்
இந்த சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான எம்எஸ் பாஸ்கரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்" என்று கூறி உள்ளார்.
Recommended Video

முன்னணி நடிகர்களின் படங்கள்
நடிகர் எம்எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார். கமல், விஜய், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்து வருகிறார் எம்எஸ் பாஸ்கர்.


Click it and Unblock the Notifications