Captain Vijayakanth: என்னை சாப்பிட வைத்து அழகு பார்த்த தாய் விஜயகாந்த்.. எம்எஸ் பாஸ்கர் நெகிழ்ச்சி!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி தன்னுடைய 71வது வயதில் காலமானார். திரைத்துறை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் இட நெருக்கடி காரணமாக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட போது சாலையில் இரு பக்கமும் கூடிய ஏராளமான மக்கள், விஜயகாந்தின் உடலுக்கு மலர்களால் மட்டுமில்லாமல் கண்ணீராலும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்றைய தினம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக் கொண்டு, விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், சத்யராஜ், சந்திரசேகர், விஷால், நடிகைகள் தேவயானி, சச்சு, வடிவுக்கரசி, அம்பிகா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு, விஜயகாந்தின் நற்செயல்களை உணர்வுபூர்வமாக பகிர்ந்துக் கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த்: நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பல தளங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வீரநடை போட்டவர் நடிகர் விஜயகாந்த். அவரை நினைவு கூர்பவர்கள் அனைவரும் இந்த விஷயங்களை காட்டிலும் அவர் உணவில்லாமல் தவித்தவர்களுக்கு கொடுத்த அன்னதானத்தைதான் அதிகமாக பாராட்டி பேசுவார்கள். அந்தவகையில் தான் சினிமாவில் ஓரளவிற்கு சாதித்து காட்டியதை தொடர்ந்து தன்னுடைய அலுவலகத்திற்கு வருபவர்கள் அனைவரும் வயிராற மனதார சாப்பிடும்படி செய்தவர் விஜயகாந்த். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதற்கு ஏற்ப அன்னதானத்தை தொடர்ந்து நிகழ்த்தி காட்டினார் விஜயகாந்த்.
நினைவேந்தல் நிகழ்ச்சி: சினிமாவில் சாதிக்க வேண்டும என்று வருபவர்கள் அனைவரும் துவக்க காலத்தில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்களாகவே உள்ளனர். அவர்களது இந்த போராட்ட காலங்களில் அவர்களது வயிறை சாப்பாடு கொடுத்து நிறைத்தவர் விஜயகாந்த். ஒரு மனிதன் வாழும் போது செய்த நல்ல செயல்கள் அவரது சாவில் வெளிப்படும் என்பதை தற்போது தன்னுடைய மறைவில் நிரூபித்துள்ளார் விஜயகாந்த். அவரது மறைவின்போதும் ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகமாக கூடிய நிலையில், தற்போது சென்னையில் அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டுவரும் நினைவேந்தல் கூட்டத்திலும் ஏராளமான பிரபலங்கள் கூடியதை பார்க்க முடிந்தது.
நடிகர், நடிகைகள் பங்கேற்பு: நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், நாசர், விஷால் உள்ளிட்ட அனைவரையும் இந்தக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை யாரையும் பாகுபடுத்தி பார்க்க மாட்டர் விஜயகாந்த் என்ற பாராட்டு அவருக்கு எப்போதும் உண்டு. இதை இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள் பகிர்ந்ததை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய நடிகர் எம்எஸ் பாஸ்கர் விஜயகாந்த் தனக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில்தான் நெருக்கம் ஆனதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அந்த சமயத்தில் தான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்ததையும் தெரிவித்தார்.
எம்எஸ் பாஸ்கர் நெகிழ்ச்சி: அவருடைய அலுவலகத்திற்கு தான் செல்லும்போதெல்லாம் சாப்பிட்டு செல்ல அறிவுறுத்துவார் என்று எம்எஸ் பாஸ்கர் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். விஜயகாந்துடன் தான் அதிகமான சந்தர்ப்பங்களில் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கையெழுத்து போட்டு கொடுத்த நடிகர் சங்க உறுப்பினர் கார்ட்டை தான் பொக்கிஷமாக தன்னுடைய சட்டை பாக்கெட்டிலேயே தற்போதும் வைத்துள்ளதாகவும் எம்எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மிகவும் வெள்ளந்தியான மனம், யாருக்கும் தீங்கு நினைக்காத எண்ணம் கொண்டவர் விஜயகாந்த் என்றும் குறிப்பிட்ட எம்எஸ் பாஸ்கர், தன்னை தாயை போல சாப்பிட வைத்து அழகு பார்த்தவர் அவர் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











