Actor Muthukaalai: 6 ஆண்டு கொண்டாட்டம்.. நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய நிலையில் அடுத்தடுத்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த வாழ்க்கையை தான் மேற்கொள்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமாக உதவியதாகவும் முத்துக்காளை முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இளங்கலையில் அடுத்தடுத்து மூன்று டிகிரிகளை நிறைவு செய்துள்ளார் முத்துக்காளை.

நடிகர் முத்துக்காளை: நடிகர் பிரபு ஹீரோவாக நடித்த பொன்மனம் என்ற படத்தின் மூலம் கடந்த 1997ம் ஆண்டில் தமிழில் நடிகராக அறிமுகமானவர் முத்துகாளை. சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வரவேண்டும் என்று நினைத்த அவர் நடிகராக மாறினார். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான முத்துக்காளை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீவிர மது பழக்கத்திற்கு ஆளாகி, பட வாய்ப்புகளை இழந்து மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு உள்ளானார். ஆனால் தற்போது தன்னுடைய குடியிலிருந்து மீண்டு படிப்பில் மிகச் சிறப்பாக விளங்கி வருகிறார் முத்துக்காளை.
58 வயதில் 3 டிகிரி: இளங்கலை படிப்பில் மூன்று பிரிவுகளில் அடுத்தடுத்து பட்டம் பெற்றுள்ளார் முத்துக்காளை. இதனை தொடர்ந்து முத்து காளைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சிறுவயதில் தான் விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டியதால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் மிகப்பெரிய மற்றும் வறுமையான குடும்பம் என்பதாலும் பள்ளிக்குப் போக முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். சென்னைக்கு வந்து சினிமாவில் களம் இறங்கி முதலில் ஸ்டண்ட் மாஸ்டராக வீரத்தையும் பிறகு அதன் மூலம் செல்வத்தையும் சேர்த்து தற்போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பலரின் கேலி, கிண்டல்: தன்னுடைய 58வது வயதில் 3வது டிகிரியை இவர் முடித்துள்ளார். இந்நிலையில் எதை இழந்தாலும் கல்வியை இழக்காதீர்கள் என்று நண்பர் ஒருவர் கூறியதை கேட்டு தான் குடியிலிருந்து மீண்டு படிப்பில் கவனம் செலுத்தியதாக முத்துக்காளை முன்னதாக தெரிவித்துள்ளார். மேலும் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க ஆசைப்பட்டதாகவும் இந்த வயதில் படிப்பதை பார்த்து தன்னை பலரும் கிண்டல் செய்தனர் என்றும் கூறியிருந்த முத்துக்காளை, தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருந்திருந்தாலும் தான் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன் என்றும் தனக்கு கிடைத்த படிப்பு தான் தன்னை மிகப் பெரிய அளவில் உற்சாகமும் சந்தோஷமும் கொள்ள செய்தது என்றும் தெரிவித்திருந்தார்.
குடியற்ற வாழ்க்கை: இந்நிலையில் மிகப்பெரிய அளவில் குடியால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்காளை கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை நிறைவு செய்ததை பாராட்டி அவருக்கு ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பு பாராட்டு விழா ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வசனகர்த்தா மற்றும் இயக்குனர் லியாகத் அலிகான் கலந்துகொண்டு நடிகர் முத்துக்காளைக்கு மெடல் அணிவித்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். குடியிலிருந்து மீண்டு அனைவரை போலவும் சகஜமான வாழ்க்கை வாழ்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமான காரணமாக அமைந்ததாக முத்துக்காளை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குடியால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வாழும் பலருக்கும் இவரது வாழ்க்கை மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











