என்னவளின் கைகளில் வளையல் இட்டு வாழ்த்திய தருணம்.. மனைவியின் வளைகாப்பில் நெகிழ்ந்த நாஞ்சில் விஜயன்!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நாஞ்சில் விஜயன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மரியா என்பவரை திருமணம் செய்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியின் கர்ப்பம் குறித்து சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் மரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி இன்றைய தினம் சின்னத்திரை பிரபலங்கள் சூழ வெகு சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுததியுள்ளார். கவிதைகளால் தன்னுடைய மனைவியின் இந்த நிகழ்வை நிரப்பியுள்ளார்.

நடிகர் நாஞ்சில் விஜயன்: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவருக்கும் மரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடந்தது. ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கலக்கிவந்த இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தன்னுடைய மனைவியுடன் இணைந்து mr and mrs சின்னத்திரை ஷோவிலும் பங்கேற்றிருந்தார். அடுத்தடுத்த அவரது இந்த திறமைகளால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
நாஞ்சில் விஜயன் -மரியா தம்பதி: திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் குழந்தை குறித்து தன்னிடம் அநேகம் பேர் கேள்வி எழுப்புவதாகவும் மகிழ்ச்சியான செய்தி இருந்தால் கண்டிப்பாக பகிர்வேன் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் வீடியோ மூலம் பேசியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மரியா கர்ப்பமாக இருப்பது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். இந்த மகிழ்ச்சி செய்தியை சொன்ன தன்னுடைய மனைவிக்காக குழந்தையின் கால் பாதங்கள் பதித்த டாலர் போட்ட தங்க செயினை தான் பரிசளித்ததாகவும் அவர் உற்சாகம் தெரிவித்திருந்தார்.
மரியா வளைகாப்பு: இந்நிலையில் இன்றைய தினம் மரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். மிகவும் கலர்புல்லாகவும் உற்சாகமாகவும் நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நாஞ்சில் விஜயன் பகிர்ந்துள்ளார். மேலும் உறவுகளும் நட்புகளும் இணைந்து என்னவளின் கைகளில் வளையல் இட்டு வாழ்த்திய தருணம் என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
தாய்மையின் அழகு: இந்த நிகழ்ச்சியில் ரோபோ சங்கர், இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பலரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதனிடையே, இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் கவிதையால் மரியாவை குளிப்பாட்டியுள்ளார். மரியா தன்னுடைய கர்ப்பம் குறித்து கூறியதையும் அவரது மேடிட்ட வயிற்றையும் தாய்மையின் அழகு குறித்து அவரது கவிதையின் அழகு நீள்கிறது. ரசிகர்களும் அடுத்தடுத்து லைக்ஸ்களால் இந்த பதிவுகளை நிரப்பி வருகின்றனர். வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











