தமிழ்நாட்டு வாழை இலை.. பிஜி தண்ணீர்..செட்டிநாடு விருந்து..மகன் கல்யாணத்தில் அசரவைத்த நெப்போலியன்!
சென்னை: வில்லனாகவும், ஹீரோவாகவும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்குநேற்று ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய தமிழ் முறைப்படி ஜப்பானே அதிர்ந்து போகும் அளவிற்கு நடந்த இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நெப்போலியன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகராக மட்டும் இல்லாமல்,திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவரின் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதாக இருக்கும் போது, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுத்து வந்தார். அதனால், எந்த பயனும் ஏற்படாததால், மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
நெப்போலியன் மகன்: அதைத்தொடர்ந்து, அமெரிக்காவிலேயே செட்டிலான நெப்போலியன், ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருவதோடு, 3000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது மகன் தனுஷூக்கு 25 வயதானதை அடுத்து, ஜூன் மாதம் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வரமுடியாததால் வீடியோ கால் மூலம் நிச்சயம் நடந்தது.
தடபுடலான திருமணம்: இதையடுத்து நேற்று ஜப்பானில் தடபுடலாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை மீனா,குஷ்பு,ராதிகா,சரத்குமார், சரத்குமாரின் மகன் ராகுல்,சுஹாசினி, கலா மாஸ்டர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜப்பானில் திருமணம் நடப்பதால், திருமணத்திற்கு வருபவர்கள் உணவில் எந்தவிதமான சங்கடமும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்.
50 முதல் 60 வகை உணவு: இதுகுறித்து, ஜப்பானில் சவுத் இந்தியன் உணவகங்களை நடத்தி வரும் குறிஞ்சி செல்வன் Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், தாய்லாந்து,ஜப்பான், இத்தாலின், பிரான்சு,ரொமானியன் டிஸ், டர்கி ஸ்வீட் 50 முதல் 60 வகையான உணவு உள்ளது, எல்லாமே வெஜிடேரியன் தான். பந்தக்கால் கட்டுவிட்டதால் நேற்று, இன்று, நாளை மட்டும் வெஜிடேரியன். மற்றபடி நான்வெஜிடேரியனும் இருக்கு இந்த திருமண விழா நவம்பர் 1ந் தேதி ஆரம்பித்து 13ந் தேதி வரை நடக்கிறது. இந்த 13 நாளும் கல்யாணம் போலத்தான் உணவு சமைத்தோம்.
பிஜி தண்ணீர்: அந்த திருமணத்திற்காக கல் உப்பு, பொன்னி அரிசி, கட்டி பெருங்காயம், ராசிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய், நான்கு மாதத்திற்கு முன்பே ஜப்பானுக்கு வந்துவிட்டது என்றார். இதுமட்டுமில்லால் பிஜி மவுண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரில் தான் உணவு சமைக்கப்பட்டது. இந்த பிஜி தண்ணீர் ரொம்ப சுவையான தண்ணீர் இதில் உணவு சமைத்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும் என்பதற்காக அந்த தண்ணீரில் உணவு சமைக்கப்பட்டது.
ஜப்பானுக்கு வந்த 30 சமையல் கலைஞர்: ஜப்பானில் இதுநாள் வரை முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய முறையில் நடந்த முதல் திருமணம் இது தான், இதற்காக இந்தியாவில் இருந்து வாழை மரம் கொண்டு வரப்பட்டது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு உணவில் சங்கடப்படக்கூடாது என்பதில் நெப்போலியன் சார் உறுதியாக இருந்ததால், தமிழ்நாட்டில் இருந்து ஜப்பானுக்கு 30 சமையல் கலைஞர்கள் வந்து இருக்கிறார்கள் என்று குறிஞ்சி செல்வன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











