நட்டி நடித்த சீசா படம்.. சொந்த ஊரிலேயே படம் ரிலீஸ் ஆகவில்லை.. வேதனையை கொட்டும் இயக்குநர்!
கரூர்: நட்டி கதாநாயகனாக நடித்து நேற்று அதாவது, ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் சீசா. இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் ஜார்னரில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தினை, குணா சுப்ரமணியம் என்ற அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார். படம் சென்னை ஏரியாக்கள் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு உள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் குணா சுப்பரமணியத்தின் சொந்த ஊரான கரூரில் படம் ரிலீஸ் ஆகவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சீசா படத்தில், நட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பங்களாவில் இருக்கும் வேலை ஆள் கொலை செய்யப்படுகின்றார். மேலும் அந்த பங்களாவின் உரிமையாளரும் அவரது மனைவியும் காணமால் போகின்றார்கள். மேலும் அந்த பங்களாவில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. இப்படியான நிலையில் அந்தக் கொலையைச் செய்தது யார்? வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர்கள் எங்கே போனார்கள்? ஹார்ட் டிஸ்க்கை திருடியவர்கள் யார்? என்ற கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்கின்றார் நட்டி.

படத்தின் மொத்த கதையையும் தாங்கி நிற்கின்றார் நட்டி. படம் முழுவதும் சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொடுக்க இயக்குநர் முயற்சி செய்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகின்றது. படத்தின் இசையும் ரசிகர்கள் மத்தியில் பாரட்டைப் பெற்றுள்ளது. படத்தில் நட்டி மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களும் ஓரளவுக்கு ஸ்கோர் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
சீசா: இப்படியான நிலையில் சீசா படத்தின் இயக்குநர் குணா சுப்ரமணியம் தனது சொந்த ஊரான கரூரில் படம் ரிலீஸ் ஆகவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “ சீசா படம் இன்றைக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் சொந்த ஊரான கரூரில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் கரூரில் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை.
சொந்த ஊர்: இப்படியான நிலையிலும் எங்களின் போராட்டத்தால், இன்று ஒருநாள் மட்டும் கரூர் கலையரங்கம் தியேட்டரில் படத்தினை திரையிடுகின்றனர். வார நாட்களில் படத்தினை ரிலீஸ் செய்வதால் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரியவில்லை. வார இறுதி நாட்கள் என்றால்கூட படம் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள். ஒரு அறிமுக இயக்குநரான எனக்கு இப்படியொரு நிலை வருமென நான் நினைக்கவில்லை. நான் இயக்கிய படம் ரிலீஸ் ஆகிவிட்டது என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், படத்தை சொந்த ஊரில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்ற வருத்தமும் உள்ளது.
வேதனை: பொங்கல் வரை இந்தப் படம் இந்தத் திரையரங்கில் ஓடினால் எங்கள் படத்திற்கு ஆதரவாக இருக்கும். சிறு வயதில் இருந்து, இந்த தியேட்டருக்கு நான் எனது அம்மாவின் கை பிடித்து வந்து பார்த்துள்ளேன். அப்படி இருக்கும்போது, இந்த தியேட்டரில் பொங்கல் வரை படம் ஓடினால் மகிழ்ச்சியாக இருக்கும். ஏற்கனவே வந்த படங்கள் ஓடிக்கொண்டு இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றார்கள். இதுமட்டும் இல்லாமல், மற்றொரு தியேட்டர் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுவிட்டதால் போதிய அளவிலான தியேட்டர்கள் இல்லாமல் போய்விட்டது” என இயக்குநர் குணா சுப்பிரமணியம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











