மாஜி முதல்வர் மகன்... இளம் ஹீரோ நிகில் திருமண நிச்சயதார்த்தம்... மணமகள் காங்.தலைவர் பேத்தியாம்!
பெங்களூரு: நடிகரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தமன்னா
இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவானது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா, விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதினார். மகாதேவ் இயக்கினார். தீப்தி சதி, ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், சம்பத் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அனிதா குமாரசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அபிமன்யூ
இதையடுத்து ஹர்ஷா இயக்கிய சீதாராமா கல்யாணா என்ற படத்தில் நடித்தார். இதில் சரத்குமார், ரச்சிதா ராம் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து மகாபாரத கதையை கொண்ட குருஷேத்ரா படத்தில் அபிமன்யூ கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து எஸ்.கிருஷ்ணா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

மாண்டியா தொகுதி
இதற்கிடையே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா பாஜக ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பலத்த போட்டிக்கு இடையே நடந்த தேர்தலில் சுமலாதா அபார வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் தலைவர்
இந்நிலையில் நிகிலுக்கு பெண் பார்த்து வந்தனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதியை பேசி முடித்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











