Pathala Bhairavi: அப்பவே அப்படி கலக்கிய பாதாள பைரவி.. 4கே தொழில்நுட்பத்தில் மறுபடி வந்தாச்சு
சென்னை: நடிகர் என்டிஆருக்கு திருப்புமுனையை தந்த படம் பாதாள பைரவி. தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தின் வரவேற்பை பார்த்து இந்தியிலும் 34 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்டது.
பாதாள பைரவி படம் வெளியாகி தற்போது 72 ஆண்டுகளை கடந்துள்ளது. என்றாலும் முதல் பேன்டசி படமான இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் தற்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு ரிலீசான இந்தப் படம் இரு மொழிகளிலும் 200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
72 ஆண்டுகளை கடந்த பாதாள பைரவி படம்: பேண்டசி படங்கள் எப்போதும் ரசிகர்களை கவர தவறுவதில்லை. அந்த வகையில் கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 1951ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வெளியான பாதாள பைரவி படம், தற்போதும் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்ற 100 படங்களில் பாதாள பைரவியும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் முன்னதாக நாகேஸ்வர ராவ் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத நிலையில் அவரால் நடிக்க முடியாமல் போக, இந்த கேரக்டரில் புதுமுக நாயகனான என்டிஆர் நடித்திருந்தார்.
என்டிஆரின் கேரியர் பெஸ்ட்: இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய முதல் படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு. என்டிஆரின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. அதிகமான பொருட்செலவில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தில் பல வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் படம்: பிரபல எழுத்தாளர் மதிரா சுப்பண்ண தீக்ஷித்தலுவின் காசி மஜ்ஜிலி கதலூ என்ற கதையை அடிப்படையாக கொண்டு பாதாள பைரவி படத்தின் கதை உருவாக்கப்பட்டது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் என்டிஆருடன் எஸ்வி ரங்காராவ், கமலா தேவி ஆஞ்சநேயலு உள்ளிட்ட பலர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேவி ரெட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 72 ஆண்டுகளை கடந்துள்ள இந்தப் படம் முதல் முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 1952ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற முதல் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.
4கே தொழில்நுட்பத்தில் பாதாள பைரவி: இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தமிழ், தெலுங்குப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்த நடிகர் என்ற பெருமையும் என்டிஆருக்கு கிடைத்தது. கண்டசாலா இசையில் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன. 1950களில் வெளியான பாகுபலி என்ற பெருமையை பெற்றுள்ள இந்தப் படம் தற்போது மேலும் ஒரு பெருமையை பெற்றுள்ளது. படம் தற்போது 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கோவாவில் களைகட்டிவரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பான அனுபவம்: 4கே தொழில்நுட்பம் மூலம் துல்லியமான அனுபவத்தை ரசிகர்கள் பெற முடியும். அந்த வகையில் முதல் பேன்டசி திரைப்படம் என்ற பெருமையை பெற்ற பாதாள பைரவி படம் ரசிகர்களுக்கு மேலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த தொழில்நுட்பத்தில் அவதார் உள்ளிட்ட படங்களும் வெளியான நிலையில், 4கே தொழில்நுட்பத்தில் கோவா திரைப்பட விழாவில் வெளியாகவுள்ள பாதாள பைரவி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications