Exclusive: 'பிருத்விக்கு இது போராட்டக்காலம்'... மகன் பற்றி நடிகர் பாண்டியராஜன் உருக்கம்!
நடிகர் பாண்டியராஜன் தனது 60வது பிறந்தநாளையொட்டி கற்றது விசில் அளவு என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தனது மகன் பிருத்வி வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பதாக நடிகர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தனது 23வது வயதிலேயே இயக்குனராகி, முதல் படத்தை வெற்றிப்படமாக தந்தவர் பாண்டியராஜன். நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம்.
கன்னிராசி, ஆண்பாவம், நெத்தியடி, கதாநாயகன், தாய்க்குலமே தாய்க்குலமே என இவர் எடுத்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு சிறிய கதை, அதற்கு அழுத்தமான திரைக்கதை, வயிறு புண்ணாகும் அளவிற்கு சிரிக்க வைக்கும் காமெடி என இவர் இயக்கிய படங்கள் எல்லாமே காலத்துக்கும் நின்று பேசும் பாக்ஸ் ஆபிஸ் கமர்சியல் சினிமாக்கள்.

திருட்டு முழி
திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்குவிசுக்கு நடையும் தான் நடிகர் பாண்டியராஜனின் அடையாளங்கள். சினிமாவைவிட்டு ஒதுங்கிவிடாமல் சமகால நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வருகிறார் இவர்.

60வது பிறந்தநாள்
பாண்டியராஜன் தனது 60வது பிறந்தநாளை கடந்த 2ம் தேதி கொண்டாடினார். ஒன்இந்தியாவிற்காக அவரை சந்திதேன். அப்போது அவர் நம்மிடம் பேசியதில் இருந்து....

என்ன சாதித்தோம்
"ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது கடந்த ஆண்டில் நாம் என்ன சாதித்தோம் என்பதை அடிப்படையாக கொண்டே அமைய வேண்டும். அதன் அடிப்படையில் என்னுடைய இந்த பிறந்தநாளில், கடந்த ஓராண்டில் நான் செய்த இரண்டு விஷயங்களை நல்லதாக பார்க்கிறேன்.

இரண்டு சாதனைகள்
ஒன்று 'கற்றது விசில் அளவு' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன். மற்றொன்று நான் இயக்கிய 'ஹெல்ப்' எனும் குறும்படம் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்திருக்கிறார்கள்.

கற்றது விசில் அளவு
'கற்றது விசில் அளவு' புத்தகத்தில் என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை, சோகமாக இல்லாமல் ரசிக்கும் படியாக நகைச்சுவையாக கூறியுள்ளேன். முக்கியமாக இந்த புத்தகம் எனது குருநாதர் பாக்யராஜுக்கு சமர்ப்பணம்.

உற்சாகத்தின் வெளிபாடு விசில்
விசில் என்பது உற்சாகத்தின் வெளிபாடு. அது ஒரு பாராட்டு, அந்த பாராட்டை பெறுவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகத்தை கூறியுள்ளேன். அதனால் தான் புத்தகத்துக்கு 'கற்றது விசில் அளவு' என பெயர் வைத்துள்ளேன். இந்த பிறந்தநாளில் இருந்து இன்னும் உற்சாகமாக செயல்படுவேன்.

இயக்கத்தில் இருந்து ஒதுங்கவில்லை
நான் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இல்லை. மனதில் ஒரு கரு தோன்ற வேண்டும். அது தோன்றிவிட்டால் படம் எடுக்கலாம். முன்பு ஒரு படத்தை எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக எடுக்கலாம் என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டி இருக்கும்.

மாயத் தோற்றம்
ஆனால் இப்போது, நிலைமை அப்படி இல்லை. படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, மக்களை எப்படி தியேட்டருக்கு கொண்டு வருவது என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. இது போல் படமே கிடையாது. தமிழ் சினிமாவே இது தான். யானை, புலி, சிங்கம் எல்லாம் இதுல இருக்கு என பல விஷயங்களை சொல்லி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது.

என் மகன் பிருத்வி
என் மகன் பிருத்திவிக்கு இது போராட்டக்காலம். அவர் போராடிக்கொண்டிருக்கிறார். தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தன்னை வருத்திக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கிறார். வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

வெற்றிக்கான போராட்டம்
வெற்றிக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அது சாதாரணமாக வந்துவிட்டால் அதன் மீது பயமும், நம்பிக்கையும் ஏற்படாது. வெற்றிக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அந்த பொறுமையாக இருக்கும் காலம் தான் மிகவும் கடினமானது. மகன் படும் வேதனையை பார்த்து எனக்கும் வேதனையாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் அவர் வெற்றி பெறுவார்", நம்பிக்கையுடன் விடைபெறுகிறார் இயக்குனர் பாண்டியராஜன்.


Click it and Unblock the Notifications